அமீர்கானுக்கு ஜே – டங்கல் விமர்சனம் – 66 மதிப்பெண்கள் – Dangal Movie Review

Times Tamil News Dangal Movie Review-poster Tamil

சினிமாவை பொழுதுபோக்காக நினைக்காமல், ஆயுதமாக பயன்படுத்தும் அமீர்கானுக்கு ஒரு ஜே போட்டுவிட்டு விமர்சனத்திற்குள் நுழையலாம். நிஜ வாழ்க்கையை படமாக எடுக்கும்போது, திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் குறைவாகவே இருக்கும் என்றாலும் திறமையான திரைக்கதையால் விறுவிறுப்பாக நகர்த்தமுடியும் என்பதற்கு உதாரணம் டங்கல்.

தன்னுடைய உடல், உயிர், மூச்சு எல்லாமே மஹாவீர்சிங் போகத்தாக வரும் அமீர்கானுக்கு மல்யுத்தமாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கை அவரது கனவை புரட்டிப்போடுகிறது. சாதாரண வேலையில் சேர்ந்து மல்யுத்தத்தை மனதுக்குள் மறைத்து வைக்கிறார். தனக்கு ஒரு மகன் பிறந்ததும், அவனுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுத்து நாட்டுக்காக பதக்கம் வெல்லவைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு வரிசையாக நான்கு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. அதனால் தன்னுடைய பிள்ளை பற்றிய கனவையும் மறந்துவிடுகிறார். இந்த நேரத்தில் உடன் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்ததற்காக அமீர்கானின் மகள்கள் இருவரும் சேர்ந்து அடித்து துவைத்துவிட, அவரது கனவு மீண்டும் உயிர் பெறுகிறது. ஆண்களால் முடியும் என்றால் பெண்ணாலும் முடியும் என நினைக்கிறார்.

Times Tamil News Dangal Movie Review 3ஆனால் பெண்கள் மல்யுத்தம் செய்வதை நினைத்துக்கூட பார்க்காத கிராமம் அது. அதனால் தனது பிள்ளைகளுக்கு மல்யுத்தம் கற்றுத்தரும் அமீர்கானின் யோசனையை நிராகரிக்கிறார்கள். மனைவியில் இருந்து மல்யுத்த அதிகாரிகள் வரை நிராகரித்தாலும் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறார். தன்னுடைய மகள்கள் இருவருக்கும் கடுமையாக பயிற்சி கொடுக்கத் தொடங்குகிறார். இந்த பயிற்சிகளை பிள்ளைகளும் தண்டனையாகத்தான் பாவிக்கிறார்கள். அதனால் தந்தையை சர்வாதிகாரியாகவும் எதிரியாகவும் நினைக்கிறார்கள். முடிந்த வரையிலும் பயிற்சிகளில் இருந்து தப்பித்துவிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களது பள்ளித் தோழியின் திருமண வைபவத்தில் இவர்களுக்கு உண்மை தெரியவருகிறது. மற்ற பெண் பிள்ளைகளைப் போன்று இல்லாமல், தங்கள் மீது அப்பா மாபெரும் கனவு வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. அவர்களாகவே மல்யுத்த களத்தில் இறங்குகிறார்கள்.

Times Tamil News Dangal Movie Review 4ஹரியானாவை சேர்ந்த மஹாவீர்சிங் போகத்தால் மல்யுத்தம் கற்றுக்கொடுக்கப்பட்ட கீதா போகத் 2010ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 55 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதுதான் மீதி கதை. இவர்தான் இந்தியாவுக்காக மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் 51 கிலோ பிரிவில் பபிதாகுமாரி வெள்ளி பதக்கம் வென்றார். இந்தப் படம் வாழ்க்கை வரலாற்றை தழுவியது, கீதா தங்கம் வென்றுவிடுவார் என்பது படம் பார்க்கும்போதே தெரிந்தாலும், நரம்புகள் வெடிக்கும் அளவுக்கான எதிர்பார்ப்பை போட்டியின்போது கொண்டுவருவதில் இயக்குனர் நிதேஷ் திவாரி வெற்றி பெற்றுள்ளார்.

இதுபோன்ற கதையில் நடிப்பதற்கு தனிப்பட்ட துணிச்சல வேண்டும். ஏனென்றால் வெற்றிபெறும் பிள்ளைகளை தள்ளிநின்று வேடிக்கை பார்க்கிறார் நாயகன் அமீர்கான். ஆரம்பத்தில் இருந்தே வழக்கமான உடலுடன் இந்தப் படத்தில் அமீர்கான் நடித்திருக்கலாம். ஆனால் ஒருசில காட்சிகளுக்காக உடம்பை முறுக்கேற்றி இருப்பதை பார்க்கும்போது, மஹா கலைஞன் அவருக்குள் தெரிகிறான்.

Times Tamil News Dangal Movie Review 2அமீர்கானின் பிள்ளைகளாக வரும் பாத்திமா சனா சாஹிப் மற்றும் சான்யா மல்கோத்திரா இருவரும் அற்புதமான தேர்வு. நடிப்பு என்பது தெரியாத அளவுக்கு புரட்டி எடுக்கிறார்கள். அதுவும் சனாவின் கன்னத்து குழியழகு படத்திற்கே அழகு சேர்க்கிறது.

ஒரு கட்டத்தில் தான் கற்றுக்கொடுத்த ஸ்டைலை மறந்துவிட்டு புதிய பயிற்சியாளர் டெக்னிக் சிறந்தது என்று கீதா சொல்வதும், அதை என்னிடம் காட்டு என்று அமீர்கான் களத்தில் குதிப்பதும் உணர்வுபூர்வமான காட்சி. இத்தனை நாட்கள் தன்னுடைய சுதந்திரத்தை பறித்த தந்தையை கீதா புரட்டிப்போட்டு ஜெயிப்பதைக் கண்டு ஒட்டுமொத்த தியேட்டரே அதிர்ந்து நிற்கிறது.

தேவையான நேரத்தில் மட்டும் இசையை கொண்டுவருவதில் பிரீதம் ஜெயித்திருக்கிறார். ஒருசில காட்சிகளில் வீரர்களின் மூச்சுக்காற்று மட்டுமே நம்மை திகிலடையச் செய்கிறது. ஆரம்பம் முதல் மெல்லிய நகைச்சுவையும் படத்தில் இழையோடுவதால் முழுமையாக ரசிக்கவும் முடிகிறது.

இந்தப் படத்திற்கு உத்திரப்பிரதேச அரசு வரிவிலக்கு கொடுத்திருப்பது மகா சிறப்பு. இதனை அத்தனை மாநிலங்களும் அமுல்படுத்துவது நல்லது. அப்போதுதான் இந்தப் படத்தை ஒவ்வொரு இந்தியனும், குறிப்பாக பெண்கள் பார்த்து ரசிக்கவும் தங்களை உயிர்ப்பித்துக்கொள்ளவும் முடியும்.

சபாஷ் அமீர்கான்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

  • 2012-ம் ஆண்டே இந்தப் படம் எடுப்பதற்கான பணி தொடங்கப்பட்டுவிட்டது. டிஸ்னி நிறுவனம் மூலம் மஹாவீர் சிங்கையும் கீதாவையும் சந்தித்துப் பேசி, இயக்குனர் நிதேஷ் திவாரியிடம் விவாதத்தை தொடங்கிவிட்டனர்.
  • இயக்குனரின் முதல் தேர்வு அமீர்கானாக இருந்தாலும், கதையைக் கேட்டதும் நடிப்பதற்கு முன்வரவில்லை. மிகவும் வயதான பாத்திரம் என்று தவிர்த்தார். ஆனால் இந்தக் கதை தன்னுடைய மனதுக்குள் சித்ரவதை  செய்வதாக உணர்ந்தார் அமீர். அதனால்  சில மாதங்கள் கழித்து மீண்டும் நிதேஷைக் கூப்பிட்டு சம்மதம் தெரிவித்தார்.
  • தொலைக்காட்சி பிரபலம் சாக்‌ஷி தன்வர் இந்தப் படத்தில் அமீர்கானுடன் ஜோடி சேர்ந்து இயல்பான நடிப்பை வழங்கியிருப்பது தனிச்சிறப்பு.

Dangal (English: Wrestling competition) is a 2016 Indian biographical sports drama film directed by Nitesh Tiwari. It stars Aamir Khan as Mahavir Singh Phogat, who taught wrestling to his daughters Geeta Phogat and Babita Kumari. The former is India’s first female wrestler to win at the 2010 Commonwealth Games, where she won the gold medal (55 kg). Her sister Babita Kumari won the silver (51 kg). “Dangal” is the Hindi term for “a wrestling competition”. Dangal Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch

Share This:

Related posts

One thought on “அமீர்கானுக்கு ஜே – டங்கல் விமர்சனம் – 66 மதிப்பெண்கள் – Dangal Movie Review

  1. […] ஆண்டு இறுதியில் வந்த அமீர்கானின் டங்கல் ஏராளமான விருதுகளை அள்ளியிருக்கிறது. […]

Leave a Comment