கொரோனாவில் சிக்கி உயிருக்கு போராட்டம்! மீண்டு வந்து 104வது பிறந்த நாள் கொண்டாடிய தாத்தா! நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மீண்டுவந்த 104 வயது முதியவர் ஒருவர் பிறந்தநாளை கொண்டாடி உள்ள சம்பவமானது அமெரிக்காவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 11,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்போது அமெரிக்காவில் தான் இந்த வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்த இயலாத நிலையில் உள்ளது. நேற்று வரை கிட்டத்தட்ட 3,11,357 மக்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 8,264 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும், 1,048 பேர் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது.

அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அமெரிக்கா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஓரளவுக்கு ஆறுதல் தரும் செய்தி அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது.

அதாவது அந்நாட்டிலுள்ள ஓரிகோன் என்ற மாகாணத்தில் மார்ச் 5ஆம் தேதி முதல் 15 முதியவர்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களுள் அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரரான லாப்ஸ்சீஸ் என்ற 104 வயது முதியவர் ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அவர் கொஞ்சம் கொஞ்சமாக நலமடைந்து வருவதாக மருத்துவர்கள் அவருடைய உறவினர்களிடம் கூறி வந்தனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் அவருடைய பிறந்தநாள் வந்துள்ளது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் முன்னேறி வரும் செய்தியை அறிந்த உறவினர்களும் நண்பர்களும், பிறந்தநாளை கொண்டாடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 

அதற்காக முதியவரின் இல்லத்தில் சமூக விலகலை கடைபிடித்து அவர்கள் அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ந்து லாப்ஸ்சீஸின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 

இந்த செய்தியானது அமெரிக்க நாட்டினருக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது.