அட்டகாசமான மாலை சிற்றுண்டி – நீங்களும் செய்து அசத்துங்க!!!

தவலை அடை ஒரு பாரம்பரிய சிற்றுண்டி. அந்த காலத்தில் வெண்கலத் தவலையில் இதை செய்திருப்பார்கள். அதனால் இந்த பெயர் வந்திருக்கிறது. இதை தோசைக்கல்லில் போட்டு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.


தேவையானவை:

பச்சரிசி – 1 தம்ளர்

துவரம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி

கடலைப்பருப்பு – 2 மேஜைக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தேங்காய் பல்லு பல்லாக கீறியது – தேவையான அளவு

தாளிக்க:-

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – ¼ தேக்கரண்டி

கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி

பெருங்காயம் – ¼ தேக்கரண்டி

வரமிளகாய் – 3 (அ) 4

கறிவேப்பிலை – சிறிதளவு

அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களான கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கிள்ளிய வரமிளகாய் துண்டங்கள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.. வறுபட்டதும் 21/2 தம்ளர் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய்த் துண்டங்களையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.. தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள அரிசி கலவையை போட்டு கிளறவும். உதிர் உதிராக வரும் அளவுக்கு கிளற வேண்டாம். தண்ணீர் சுண்டி கொஞ்சம் கெட்டியாக வந்தால் நிறுத்தி விடலாம்.

கை பொறுக்கும் சூட்டில் ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.. தோசைக்கல்லை காயவைத்து உருண்டைகளை உள்ளங்கை அளவு அடைகளாக கைகளில் வைத்தோ அல்லது வாழையிலை, பிளாஸ்டிக் ஷீட் இவற்றில் வைத்தோ தட்டிக் கொள்ளவும். மெலிதாக தட்டவேண்டாம். ஒரு சமயத்தில் ஏழு அடைகள் வரை தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு மூடவும். நிதானமான தீயிலேயே இருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து, கவனமாக அடைகளை திருப்பிப் போட்டு, மீண்டும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். இருபுறமும் முறுவலாக வந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.