கொரோனா தடுப்பு பணி..! தமிழக அரசுக்கு உதவியாக களம் இறங்கிய ஈஷா..!

கொரோனா தடுப்பு பணி: அரசுடன் இணைந்து களப்பணியாற்றும் ஈஷா


கோவை கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஈஷா தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி சேவையாற்றி வருகின்றனர். இதற்காக, ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பல்வேறு உதவிப் பணிகளை செய்து வருகிறது.

குறிப்பாக, தற்போதைய சவாலான சூழலில் இரவு பகலாக சேவையாற்றி வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. முதல்கட்டமாக, அவர்களுக்கு பாதுகாப்பு முக கவசம் மற்றும் ‘ஹாண்ட் சானிடைசர்’ அடங்கிய சுமார் 600 மருத்துவ பாதுகாப்பு பெட்டகங்கள் (Protective kits) இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பூலுவப்பட்டியில் உள்ள அரசு பொது ஆரம்ப சுகாதார மையத்தில் 30 படுக்கைகள் கொண்ட தனிமை வார்டு அமைப்பதற்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து வருகிறது. அங்கு பணியாற்றுபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்,

நோய் பாதித்தவர்களுக்கான படுக்கை வசதிகள், சோலார் கீட்டர், வாஷிங் மெசின் உள்ளிட்ட உதவிகளை ஈஷா செய்து தர உள்ளது. இதுதவிர, சுகாதார துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஈஷா தன்னார்வலர்கள் தொண்டமுத்தூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

ஈஷா யோகா மையத்தில் தங்கி இருக்கும் நபர்களும், ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறப்பிடத்தக்கது. ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கமானது பல ஆண்டுகளாகவே கிராமப்புறங்களில் கல்வி, மருத்துவம் சார்ந்த சேவைகளை செய்து வருகிறது.