ஏகாதசி கிராமம் – ராமபிரான் தனக்குத்தானே சிலை வடித்து பிரதிஷ்டை செய்த தலம்!

எத்தனை எத்தனையோ ஊர்களில் எவ்வளவோ கிராமங்கள் வித்தியாசமான பெயர்களோடு இருக்கின்றன.


ஆனால், மிக வித்தியாசமாக, திதிகளில் ஒன்றான ஏகாதசியின் பெயரால் அழைக்கப்படும் ஒரு கிராமம் இருக்கிறது என்பது ஆச்சர்யம் அல்லவா! அதைவிட மேலும் ஓர் அபூர்வமும் உண்டு அங்கே. அது, ராமபிரான் தனக்குத்தானே சிலை வடித்து பிரதிஷ்டை செய்த இடம் என்பதுதான்.

ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட ஊர், வடுவூர். ஓர் ஏகாதசி தினத்தன்று இந்த ஊர் தானமளிக்கப்பட்டதால், ஏகாதசி கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில், ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் இருந்த இடத்தில்தான் கோதண்டராமர் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அவர் இங்கு கோயில் கொண்ட விதம் சுவையானது.

தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் மேற்கொண்ட ராமன், பின்னர் அயோத்தி நோக்கிப் பயணிக்க ஆயத்தமானார். ஆனால் ராமபிரானின் அருள் ஒளியில் திளைத்துப் பழிகிய ரிஷிகளோ ராமபிரானைப் பிரிய மனமின்றி அவர் தம்முடனே இருக்க வேண்டுமென வேண்டினார்கள். அன்புக்கும் கடமைக்கும் இடையில் நின்று சிந்தித்த அண்ணல் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு தமது ஆசிரமத்தில் அமர்ந்து யோசிக்கலானார். அதையடுத்து ராமர் தமது சந்தரவடிவை தன் கையாலேயே விக்ரகமாக வடித்து தமது ஆசிரம வாயிலில் வைத்துவிட்டு உள்ளே சீதாபிராட்டியுடன் இருந்தார்.

மறுநாள், ரிஷிகளும் முனிபுங்கவர்களும் பிரானையும், பிராட்டியையும் வழக்கம் போல் தரிசிக்க ஆசிரமத்துக்கு வந்தனர். அப்போது ஆசிரம வாயிலில் இருந்த ராமரின் சுந்தரச்சிலையில் இதயத்தைப் பறிகொடுத்து மயங்கி நின்றனர். பின்னர் உள்ளே சென்று ராமரை தங்களுடனே தங்கியருள மீண்டும் வேண்டி நின்றனர். அப்போது அந்த சீலர்களை நோக்கி ராமர், "உங்களுக்கு நான் வேண்டுமா? என்து சிலை உருவம் வேண்டுமா?' எனக் கேட்டார். சிலையை கண்டு மனம் மயங்கியிருந்த தவசீலர்களின் மனம் அதிலேயே லயித்து இருந்ததால் சிலைக்கு மாற்று எது என்பதை மறந்து, தங்களுக்கு அந்தச் சிலையே வேண்டும் எனக் கூறிவிட்டனர். புன்னகையுடன் அதற்கு சம்மதித்த ராமர், அச்சிலையை அங்கேயே விட்டுவிட்டு லட்சுமணர், சீதாபிராட்டி சகிதம் காட்டை விட்டு நாட்டை நோக்கிப் பயணமானார்.

வெகுகாலம் கழித்து, கானகத்தில் அச்சிலைகளைக் கண்ட திருக்கண்ணபுரம் வாசிகள் ராமபிரானின் சிலையை தங்கள் ஊருக்குக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆராதித்து வரலாயினர். பின்னர் ஒரு கல்ப காலத்தில் திருக்கண்ணபுரவாசிகள் ராமபிரானின் சிலையோடு தாங்கள் செய்து வைத்திருந்த சீதை, லட்சுமணர், பரதன், அனுமன் சிலைகளையும் திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைஞாயிறு எனும் கிராமத்தில், ஓர் அரசமரத்தின் அடியில் பாதுகாப்புக்காக புதைத்து வைத்தனர்.

காலவெள்ளத்தில் எத்தனையோ ஆண்டுகள் கடந்தன. அப்போது தஞ்சையை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். ஒரு நாள் மன்னரின் கனவில் ராமரே காட்சியளித்து, தாம் தலைஞாயிறு எனும் இடத்தில் குறிப்பிட்ட மரத்தினடியில் புதையுண்டிருப்பதாகவும்; தம்மை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து ஆராதிக்குமாறும் கூறினார். திடுக்கிட்டெழுந்த மன்னர், தம் பரிவாரங்கள் படைசூழ தலைஞாயிறு சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டி விக்ரகங்களை வெளியே எடுத்து வியந்தார். பின்னர் அச்சிலைகளுடன் மன்னர் பரிவாரம் கிளம்ப, அந்த நள்ளிரவில் உள்ளூர் மக்கள் விழித்தெழுந்து, சிலைகளை மன்னர் கொண்டு செல்லாமல் தடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து பரதர், லட்சுமணர் சிலைகளை மட்டும் அவர்களிடம் கொடுத்தவிட்டு, ராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் மன்னர் புறப்பட்டார்.

தஞ்சை நோக்கித் திரும்பும் வழியில் நடுநிசி ஆகிவிடவே வடுவூரில் விக்ரகங்களுடன், தம் பரிவாரம் புடைசூழ மன்னர் சற்று தங்கி ஓய்வெடுத்தார். ஒற்றுமையும் பண்பாடும்மிக்க வடுவூர் பெருமக்கள் ஒரு சேரத் திரண்டு, மேற்படி அர்ச்சா பிம்பங்களை மன்னர் எடுத்துச் செல்ல வேண்டாமென விண்ணப்பித்து வடுவூரிலேயே ஏற்கனவே இருந்த ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் கோயிலில் பிரதான மூர்த்தியாக ராமரை பிரதிஷ்டை செய்துவிட வேண்டுமென மன்றாடி நின்றனர்.

முதலில் மன்னர் மறுத்தார். ஆனால் ஊர்மக்கள் அனைவரும் ஆலயத்தின் மொட்டை கோபுரத்தில் ஏறி நின்று குதித்து உயிர்விட்டு பிராணதியாகம் செய்ய உறுதி பூணவே, மன்னர் அவர்களின் உறுதிக்கும், ராமபக்திக்கும் மெச்சி வியந்து, அச்சிலைகளை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்ய சம்மதித்தார். அது முதல் கோபாலன் கோயிலின் பிரதான மூர்த்தியாக ராமர் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

மூலவர் சன்னதியில் உற்சவர் ராமராக, ராமரே செய்தருளிய ராமரின் விக்ரகம் இன்றும் காண்போரைக் கவர்வதாய் உள்ளது. பிற்காலத்தில் வடுவூர் மக்கள் லட்சுமணர் சிலையையும் வார்த்தனர். அது பெண் வடிவாகவே அமைந்துவிடவே, அதை அழகிய சுந்தரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, அதற்குத் தனி ஆலயம் அமைத்தனர்.

ஜெகன்மோகனரான மூலவர் கோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணர், அனுமன் சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் கருவரையில் காட்சி தருகிறார். நாச்சியாரான சீதா பிராட்டிக்குத் தனி சந்நதி இல்லை. இத்தலத்து ஆதி பெருமாள் ருக்மணி - சத்யபாமா சமேத கோபாலன், மகா மண்டபத்தின் வடப்புறம் திருப்பள்ளி அறையில் தினசரி பூஜை கண்டருளுகிறார்.

தலவிருட்சம், மகிழமரம். ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் வில்வம் ஒன்றும் உள்ளது. திருக்குடந்தை பெருமாள் ஆராவமுதன் எழுந்தருளி இரு தினங்கள் இருந்து பெருமாள் சடாரி பிரதிஷ்டை செய்து உகந்தருளிய தலம் இது.

ஸ்ரீமத் அகோபில மடம் 43-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் இத்தலத்தில் எழுந்தருளி "கற்பார் ராமபிரானை அல்லால்' எனும் திருவாய்மொழி 7-5-1 பாசுரத்தையும், "மன்னு புகழ் கௌசலை தன்' எனும் குலசேகர ஆழ்வாரின் திருமொழி 8-1 பாசுரத்தையும் சமர்ப்பித்தார். ஆசார்யர்களால் போற்றப்பட்ட பிரார்த்தனைத் தலமான வடுவூர் கோதண்டராமரை நாமும் வணங்கி வளம் பெறுவோம்!