ஈரோட்டில் 2 பேர், நெல்லையில் ஒருவர், கோவையில் ஒருவர்..! தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தாக்குதல்!

தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ள நிலையில் குணமாகி வீடு திரும்பியவர் எண்ணிக்கை 1 என நீடிக்கிறது.


தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து கோவைக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர் கோவையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று இரவு மேலும் 2 பேருக்கு கொரோனா நோய் உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து சென்னை வந்த 64 வயது மூதாட்டிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல் துபாயில் இருந்து நெல்லை திரும்பிய 43 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதியான 9பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர். எனவே வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரோட்டில் நேற்று முன் தினம் இரண்டு பேர் கொரோனாவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்துரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.