கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்..! பகீர் கிளப்பும் செவிலியர்கள்!

அரசுக்கு எதிராக செவிலியர்கள் நிர்வாணமாக போராடும் சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 11,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த நோய் தாக்குதலால் பிரான்ஸ் நாட்டினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்து பிரான்ஸ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 82,165 பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 6,500-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களை காப்பாற்றுவதற்காக அந்நாட்டில் மருத்துவர்களும், செவிலியர்களும் போராடி வருகின்றனர்.

இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில், இந்த வார தொடக்கத்தில் மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். இன்னும் அடுத்த கட்டத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் செவிலியர்கள் பலர் தங்களுடைய நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் "#Poilcontrelecovid" ஹேஷ்டேக்கை (கொரோனாவுக்கு எதிராக எங்களை நிர்வாணமாக அனுப்புகின்றனர்) பயன்படுத்தி வருகின்றனர். ஒரு செவிலியர் கூறுகையில், "நோயாளிகளில் காப்பாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்களும், செவிலியர்களும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி செல்கின்றோம். இதன்மூலம் நாங்கள் எங்களுடைய வீட்டிற்கும் இந்த தொற்றை எளிதாக எடுத்து செல்கிறோம் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்படுகிறது. 

நாங்கள் நோயாளிகளை பராமரித்து வருகிறோம். அதன் பின்னர் எங்களுடைய வீடுகளுக்கு செல்கிறோம். அப்போது எங்களுக்குள் வைரஸை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்து வந்து விட்டோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால்தான் அரசு எங்களை வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நிர்வாணமாக போராட செய்கிறதை உணர்த்தும் வகையில்,நாங்கள் நிர்வாணமாக எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்.

எங்களுக்கு வழங்கப்படுகின்ற முகக் கவசங்கள் இல்லாமல் மிகவும் பழமையானவை. கடந்த 20 ஆண்டுகளாகவே எங்கள் நாட்டின் சுகாதாரத்துறை பாழாகிவிட்டது" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த போராட்டமானது பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.