வசந்த நவராத்திரி எப்படி உருவானது தெரியுமா?

பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.


வசந்த நவராத்திரியை இளவேனில் அல்லது சித்ரா நவராத்திரி என்றும் அழைக்கலாம். வட இந்தியாவில் இதனை வெகு விமர்சையாக 9 நாள் திருவிழாவாக கொண்டாடுவார்கள். நவராத்திரியை வருடத்தில் இரண்டு முறை கொண்டாடுவார்கள். வசந்த நவராத்திரி இளவேனில் காலத்தின் போது கொண்டாடப்படுகிறது. சரத் நவராத்திரி என்பது இலையுதிர் காலத்தின் போது கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது ஒன்பது நாளும் துர்கை அல்லது சக்தி தேவியை வணங்குவார்கள்.

மகிஷாசூரன் என்ற அரக்கனை அழிக்க அனைத்து கடவுள்களால் ஒரு தேவி படைக்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது. அனைத்து கடவுள்களும் தங்களின் சக்தியை ஒன்றிணைத்து வலிமையான தேவியை உண்டாக்கி அவருக்கு துர்க்கை என்று பெயரையும் சூட்டினர். ராமபிரான் தான் வசந்த நவராத்திரி என்ற வழக்கத்தை கொண்டு வந்தார் என்றும் நம்பப்படுகிறது. நாள் முழுவதும் விரதம் இருந்து கடவுளை வழிபட்டு, இந்த ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படும்.

வசந்த நவராத்திரியின் கதை: ஒரு காலத்தில் கோசலா அரசாங்கத்தை ஆண்டு வந்தார் துருவசிந்து என்ற மன்னர். வேட்டையாடும் போது அவர் கொல்லப்பட்டார். அதனால் அவரின் மகனான சுதர்சன் இளவரசருக்கு முடி சூட ஏற்பாடு நடைபெற்றது. இருப்பினும் அண்டை அரசர்களான யூதஜீத் மற்றும் வீரசேனா அந்நாட்டின் மீது படையெடுத்தனர். அப்போரில் வீரசேனாவை வீழ்த்தினார் யூதஜீத் மன்னர். அதனால் தன் தாய் மற்றும் ஒரு அரவாணியுடன் இளவரசர் சுதர்சன் நாட்டை விட்டு தப்பித்து சென்றார். அவர்கள் பரத்வாஜா என்ற துறவியின் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர். இளவரசர் சுதர்சனை கொலை செய்ய அவரை தேடி யூதஜீத் வந்தார்.

இருப்பினும் தஞ்சம் வந்தவர்களை நெருங்க விடவில்லை அந்த துறவி. அதனால் யூதஜீத் திரும்பி சென்றார். பல வருடங்கள் கழித்து, ஒரு நாள், அத்துறவியின் மகன், அந்த அரவாணியை 'க்லீபா' என்ற அவரின் அசல் பெயரில் அழைத்தார். இதனை 'க்லீ' என்று புரிந்து கொண்ட அந்த இளவரசர், 'க்லீம்' என்று அழைத்தார். க்லீம் என்றால் இறைதன்மை உடைய தேவியை அழைக்கும் மந்திரமாகும்.

இதனை மீண்டும் மீண்டும் உச்சரித்ததால், தேவியின் அருளை பெற்றார் இளவரசர். அவர் முன் காட்சி அளித்த தேவி, அவருக்கு சக்தி மற்றும் ஆயுதங்களை அளித்து அருள் வழங்கினார். பின்னர் சக்தி வாய்ந்த ஒரு அரசரின் மகளை அவர் கைப்பிடித்தார். தன் மாமனாருடன் சேர்ந்து யூதஜீத் அரசனை வீழ்த்தி தன் அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றினார் சுதர்சன். சுதர்சன் நாட்டு மக்களோடு வருடந்தோறும் வசந்த காலத்தில் தேவிக்கு விழா எடுத்து வணங்கி மகிழ்ந்தான். இதுவே வசந்த நவராத்திரி ஆயிற்று. சுதர்சனின் வழித்தோன்றல்களாகிய இராம லஷ்மணர்கள் சீதையைக் கண்டுபிடித்து மீட்டு வரும் முயற்சியில் வெற்றிபெற புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியில் தேவியை வணங்கி வேண்டிக்கொண்டனர் என்று இராமாயணம் கூறுகிறது.

இந்நேரத்தில் 9 நாட்கள் விரதத்தை மக்கள் கடைப்பிடிப்பார்கள். வசந்த நவராத்திரி பூஜையின் போது, தினமும் மாலை நேரத்தில் துர்கா சுக்தம் ஓதப்படும். பண்டிகையின் எட்டாவது நாளின் (அஷ்டமி) போது, 'கஞ்சாக்' என அழைக்கப்படும் சின்ன பெண் பிள்ளைகள் சில பேர் வீட்டிற்கு அழைக்கப்படுவார்கள்.

வீட்டின் குடும்ப தலைவர்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்து, அவர்களுக்கு விருந்து பரிமாறுவார்கள். சேலை, வளையல் மற்றும் பணம் என சின்ன சின்ன பரிசுகளை அந்த பிள்ளைகளுக்கு வழங்குவார்கள். தேவியின் பிரதிநிதிகளாக தான் இந்த பெண் பிள்ளைகள் பார்க்கப்படுகிறார்கள். அதனால் துர்கை அம்மனை போல் அவர்களை பாவித்து, அவர்களை ஒவ்வொரு வீட்டிற்கும் அழைக்கிறார்கள்.

வசந்த நவராத்திரி என்பது கொண்டாட்டம், விரதம் கடைப்பிடித்தல் மற்றும் விருந்திற்கான நேரமாகும். இத்திருவிழா வண்ணமயமான இளவேனிற் காலத்தை சுவாரசியமாகவும் புனிதமாகவும் வைத்திருக்கும்.