தத்தளித்த சிறுவன்! காப்பாற்றச் சென்ற காவலாளி! இருவரையும் பலி கொண்ட மரண நீச்சல் குளம்!

கோவையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில் காப்பாற்றச் சென்ற காவலாளியும் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.


மருதமலை அடிவாரத்தில் தனியார் நீச்சல் குளம் ஒன்று உள்ளது. இங்கு 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பான ஆழத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த வரை எல்லாம் நல்மாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

அவர்களில் ஒரு மாணவனுக்கு ஆர்வக்கோளாறு மரணப் பாதைக்கு இட்டுச் சென்றது. நீரில் விளையாடியபடியே 7 அடி அழமுள்ள பகுதிக்கு சென்றபோது முறையான பயிற்சி இல்லாத அந்த மாணவனுக்கு நீரில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டடதால் தண்ணீரை விட்டு வெளியேற சக்தி இழந்து தடுமாறினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியதையடுத்து காவல் பணியில் இருந்த 60 வயது தேவராஜ் ஓடோடியும் வந்தார். பதற்றமான அந்த நேரத்தில் தனது நீச்சல் திறன் மற்றும் வயது குறித்த உணர்வின்றி மாணவனை காப்பாறும் ஒரே நோக்குடன் தண்ணீரில் பாய்ந்த அவர், மாணவன் தத்தளித்த இடத்துக்குச் சென்றபோது தானும் நீரில் சிக்சிக் கொண்டார். 

மூச்சுத் திணறிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்க்ள் உள்ளிட்டவை இல்லை என புகார் எழுந்துள்ள நிலையில் இருவரின் மரணம் குறித்துபோலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.