தெலுங்கானா மாநிலத்தில் குழந்தைகளுக்கு எலிமருந்து கொடுத்துவிட்டு காணாமல் போன தாய் 26 ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தைகளுடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 பிள்ளைகளுக்கும் உணவில் எலி மருந்து..! 26 ஆண்டுகளுக்கு முன் தப்பி ஓடிய தாய்..! மீண்டும் வீடு திரும்பிய போது அரங்கேறிய நெகிழ்ச்சி செயல்!
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்மூல் நர்வா கிராமத்தில் சின்னஞ்சையா, நீலம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள். அப்போதே மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நீலம்மாள் ஒருநாள் 4 குழந்தைகளுக்கும் உணவில் எலிமருந்து கொடுத்துவிட்டு மாயமாகிவிட்டார்.
அம்மா ஆசையாக கொடுத்தது விஷம் கலந்த உணவு என தெரியாமல் சாப்பிட்ட குழந்தைகள் 4 பேருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர். இந்நிலையில் மனநிலை மேலும் மோசம் அடைந்த நீலம்மாள் திக்குத் தெரியாமல் பல கிராமங்களுக்கு சென்று அலைந்துள்ளார்.
இதற்கிடையே நீலம்மாளின் கணவரும் கடந்த 2007ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதற்கிடையே சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் சுற்றித்திரிந்த நீலம்மாள் தனியார் மனநல காப்பக ஊழியர்களால் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பின் நீலம்மாளிடம் விசாரணை மேற்கொள்ள தனக்கு நினைவுக்கு தெரிந்தவரை அடையாளங்களை கூறினார்.
பின்னர் காவல்துறையினர் தெலுங்கானா மாநிலம் ஷாம் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். பின்னர் நீலம்மாளின் குடும்பத்தாரை கண்டுபிடித்து தகவல் அளிக்கப்பட்டது. அதை அடுத்து நீலம்மாளின் 4 பிள்ளைகளும் சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்தனர். குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹிரா 4 பிள்ளைகளுடன் நீலம்மாளை சேர்த்து வைத்தார். 26 ஆண்டுகளுக்கு பிறகு, தாய் நீலம்மாளை சந்தித்த பிள்ளைகள் மன மகிழ்ச்சியோடு தாயை அரவணைத்தனர்.
விஷம் கொடுத்ததால் 4 பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டிருப்பார்கள் என்ற சோகத்தில் இருந்த நீலம்மாளுக்கும் தற்போது ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.