தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனாலு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டார். இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்த முடிவை எடுப்பதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக தெரியவந்துள்ளது.
தேர்தலுக்கு ஸ்பீடாக தயாராகிறது அ.தி.மு.க. பொதுக்குழுவில் இறுதி முடிவுகள் எடுக்கப்படுகிறது.
கடைசியாக கடந்த டிசம்பர் மாதத்தில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க. பொதுக்குழுவை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 302 பேர் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மொத்தம் 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறச் செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூட்டணியில் இடம் பெறும் கட்சி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
அ.தி.மு.க.வுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்காக உருவாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.
இது தவிர தமிழக நலன் காக்க பல்வேறு தீர்மானங்களும் மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட உள்ளன.
கூட்டத்தில் பங்கேற்க வரும் உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.