சென்னையில் மேகத்திரள் வெடித்ததன் காரணமாகவே ஒரே நேரத்தில் ஒரே மாதிரி அனைத்து இடங்களிலும் மழை கொட்டி வருகிறது.
மேகத் திரள் வெடித்தது! சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு காரணம் இது தான்!
சென்னையில் நள்ளிரவு திடிரென கனமழை கொட்டியது. இடி மின்னலுடன் மழை பிரித்து வாங்கியது. காலையிலும் கனமழை நீடிக்கிறது. திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சென்னையை கனமழை சூழ்ந்துள்ளது.
சென்னை நகரம் மட்டும் இல்லாமல் கோயம்பேடு, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகரங்களிலும் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதே போல் காஞ்சிபுரம் பகுதிகளையும் மழை விட்டு வைக்கவில்லை.
ஒரே நேரத்தில் ஒரே மாதிரி சென்னையை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக திருவள்ளூரில் 212 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இப்படி திடீரென மழை கொட்டுவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக சென்னை சுற்றுவட்டாரங்களை பொறுத்தவரை ஒரு இடத்தில் கனமழை பெய்தால் அருகாமையில் லேசான மழை இருக்கும். ஆனால் இன்று அனைத்து பகுதிகளிலும் ஒரே போல் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேகத் திரள் வெடித்தால் தான் இப்படி மழை ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பல இடங்களில் கொட்டும் என்கிறார்கள்.
மேகத்திரள் வெடிப்பு என்பது வழக்கமாக மழை பெய்யும் முறையில் இருந்து மாறுபட்டது. கருமேகங்கள் ஒரே நேரத்தில் பிளந்து மழையை கொட்டுவது தான் மேகதிரள் வெடிப்பு. காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மேகத்திரள் வெடிப்பு என்பது இயல்பாக அவ்வப்போது நடைபெறக்கூடியது.
தமிழ்நாடு வெதர்மேனும் கூட மழை பார்ப்பதற்கு மேகத்திரள் வெடித்து கொட்டுவது போல் தான் இருப்பதாக கூறியுள்ளார். இருந்தாலும் கூட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்றே கூறியிருந்தது. ஆனால் பெய்யும் மழையை பார்த்தால் அப்படி தெரியவில்லை.