கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் சேர்க்க போவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் கொரோனா..! குவியும் ஆன்லைன் ஆர்டர்..! 1 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் அமேசான்..!
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 7300-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகளை உணர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மக்கள் அதிகம் வெளியே நடமாட கூடாது என்றும், முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதனால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே புழங்கி வருகின்றனர். தங்களுக்கு தேவையான பொருட்களை சமூக வலைத்தளங்களின் மூலம் ஆர்டர் செய்து பெற்று கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டில் இயங்கிவரும் அமேசான், ஆல்விண்ஸண், புரோகர், ரேலிஸ் போன்ற நிறுவனங்கள் வீட்டிலேயே பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டெலிவரி செய்வதற்காக கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் சேர்க்க போவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
திடீரென்று மூடப்பட்ட உணவகங்கள் மற்றும் இதர பணியிடங்களில் வேலை பார்த்துவந்த ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடப்போவதாக அமேசான் பன்னாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியானது அந்நாட்டில் வைரலாக பரவி வருகிறது.