நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்காத மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்..! உயர்நீதிமன்றத்தின் பரபர தீர்ப்பு!

நெற்றியில் குங்குமம் பொட்டு வைக்காத மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ள தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


குவஹாத்தியில் திருமணமான இந்து பெண்கள் ஒருவர் ஹிந்து முறைப்படி நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு மறுத்ததால் அவரது கணவன் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகளால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையில் இந்த தம்பதியினர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் திருமணமான ஒரு சில நாட்களிலேயே அந்த பெண் கணவரின் குடும்பத்தினருடன் இணைந்து வாழ மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதன் விளைவாக இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியுள்ளது. நாளடைவில் அவர்களுக்கிடையே இந்த பிரச்சினை அதிகரித்ததுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி முதல் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் இணைந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றமானது நிரூபிக்கப்படாததால் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது. கணவர் அல்லது கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தான் அந்தப் பெண் நெற்றியில் குங்குமம் இடுவதை நிறுத்திக் கொண்டு இருக்கிறார் என்ற தகவலும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நீதிமன்றம் நெற்றியில் குங்குமம் அணிய மறுப்பது அவளை திருமணமாகாதவள் என்றும் அல்லது தனது கணவருடன் நடந்த திருமணத்தை ஏற்க மறுத்ததைக் குறிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இது அவர்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிக்கொணர்கிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளதை அடுத்து அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தகவலானது தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.