தமிழகத்தில் திடீரென ஒரு புரட்சி எழுந்தது என்றால், அது ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட நேரம்தான். அத்தனை தமிழர்களும் தானாகவே ஒன்றிணைந்தனர். அதனால், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது.
தமிழர் திருவிழாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி..! எடப்பாடியாரின் அசத்தல் உத்தரவு
ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இன்னமும் நீடித்துவருகிறது. மேலும் இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டதாகவும் உறுதியான தகவல் வருகின்றன. அதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி எடப்பாடியார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை (தெர்மல் ஸ்கேனிங்) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுத்துள்ள முதல்வர் எடப்பாடி, ஜல்லிக்கட்டுக்கும் அனுமதி கொடுத்து அசத்திவிட்டார் என்பதுதான் மக்களின் பேசுபொருளாக இருக்கிறது.