இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி வேகமாக மோதியதில் சம்பவயிடத்திலேயே 7 வயது மாணவி உயிரிழந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாத்தா கூட ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றேன்மா..! பைக்கில் ஏறிய 2ம் வகுப்பு சிறுமிக்கு அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த பயங்கரம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள ஜே.காருப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவருடைய தந்தையின் பெயர் பசப்பா. மாதேவனுக்கு சிவண்ணா என்ற சகோதரர் உள்ளார். இருவருடைய மகள்களான வனிதா மற்றும் சௌந்தர்யா அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பில் பயின்று வருகின்றனர்.
இதனிடையே நேற்று காலையில் பேத்திகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக பசப்பா தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். கூடவே அவருடைய பேத்திகளும் சென்றனர். கூட்டுரோடு பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.
மோதிய அதிர்ச்சியில் சம்பவயிடத்திலேயே வனிதா லாரியின் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்தார். பசப்பா மற்றும் சௌந்தர்யாவுக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
வனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தகவலையறிந்த அங்கு சென்று கதறி அழுதனர். மின்னல் வேகத்தில் செல்லும் லாரிகளால் அடிக்கடி இந்த பகுதிகளில் விபத்து ஏற்படுவதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களிடம் சமரசம் பேசியுள்ளனர். பின்னர் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.