ராமதாசுக்கு சூடு, சொரணை, வெட்கமே இல்லையா? - ஸ்டாலின் சூடான கேள்வி.

அ.தி.மு.க என்ற ஊழல் கட்சியின் அவலங்களை புத்தகமாகவே எழுதிய ராமதாஸ் அவர்கள், நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் இன்றைக்கு அ.தி.மு.க வோடு கூட்டணி வைத்திருக்கிறார்; மக்களைப் பற்றிச் சிந்திக்காத இவர்களின் நிலை என்னவாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்”


 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் சேரி ஊராட்சியில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:

அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். உங்களுடைய குறைபாடுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்வது மட்டுமல்ல, அதை செய்தும் கொடுக்க வேண்டும். உங்களுடைய குறைகளை எல்லாம் போக்கிட வேண்டும். என்பதற்காகத்தான் உங்களைத் தேடி நாடி வந்திருக்கின்றோம். உங்களைத் தேடி நாடி வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு, மிகுந்த பூரிப்போடு, பெருமிதத்தோடு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருப்பதைப் பார்க்கின்ற போது நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகின்றேன் பெருமைப்படுகின்றேன். நான் சில தாய்மார்களையும், சகோதரிகளையும் பார்க்கின்றேன். நம்முடைய வீட்டுக் கல்யாணத்திற்கு செல்கிறோம், வீட்டில் ஏதோ நல்ல நிகழ்ச்சி நடக்கின்றது அதற்காக சீவி சிங்காரித்து எப்படி வருவார்களோ அதைப் போல் நீங்கள் எல்லோரும் சீவி சிங்காரித்து ஒரு புன்முறுவலோடு வந்திருக்கின்றீர்கள்.

நீங்கள் இங்கே வருவதற்கு ஒரே காரணம் எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. ஏனென்றால், இப்போது நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. எந்தக் காரியமும் நடக்க முடியாத ஒரு சூழ்நிலை. எனவே, இந்த நேரத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள் என்றால், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் இருந்து பணியாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான், இந்தச் செயலில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றது. இந்த ஊராட்சிகளில் தி.மு.க சார்பில் இன்றைக்கு தலைமையில் இருக்கக்கூடிய நாங்கள் மட்டுமல்ல மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.,க்கள் கட்சியில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்கள் முன்னோடிகள் எல்லோரும் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து இதுபோல், கிராம சபை கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். நான் மகிழ்ச்சியோடு சொல்கின்றேன், இதுவரைக்கும் எந்தக் கட்சியும் செய்யாதது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் கூட எந்தக் கட்சியும் செய்யாததை தி.மு.க இன்றைக்கு இந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால், மகாத்மா காந்தி அவர்கள் அடிக்கடி சொல்லுவார். ‘கிராமங்கள் தான் கோவில்கள்’ என்று, அந்தக் கோவில்தான் இந்தக் கிராமம்.

ஆகவே, அந்தக் கோவிலைத் தேடி பக்தனாக உங்களில் ஒருவனாக வந்திருக்கின்றேன். நாங்கள் எல்லோரும் பேசுவதற்காக இந்தக் கூட்டம் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள், நாங்கள் யாரும் பேசமாட்டோம், நாங்கள் பேச வேண்டியது எல்லாம் கட்சிக்கூட்டங்கள், செயற்குழு கூட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் பேசுவோம். நீங்கள் இங்கு பார்க்கலாம், கட்சிக்காரர்கள் யாரும் உட்காரவில்லை. நீங்கள் தான், பெண்கள், இந்த ஊரில் இருக்கும் பெரியவர்கள் தான் உட்கார்ந்திருக்கின்றீர்கள். கட்சிக்காரர்கள் உங்களைச் சுற்றி நிற்கின்றார்கள். உங்களுக்கு பாதுகாப்பாக, தி.மு.க உங்களை பாதுகாக்கக்கூடிய வகையில் பாதுகாப்பாக என்றைக்கும் இருக்கும், என்ற வகையில் உங்களை சுற்றி நிற்கின்றார்கள்.

ஆகவே, முதலில் இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.கவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து, என்னுடைய இருகரம் கூப்பி உங்கள் அனைவரையும் வருக – வருக என்று வரவேற்கின்றேன்.

இப்பொழுது, இந்த ஊராட்சி சபை எதற்கென்று கேட்டீர்கள் என்றால், இந்த தமிழ்நாட்டில் ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு எடப்பாடி தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதா தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டீர்கள். ஆனால், ஜெயலலிதா அவர்கள் இறந்து விட்டார்கள். இறந்த காரணத்தினால், ஒரு விபத்தின் காரணத்தினால் இன்றைக்கு எடப்பாடி முதலமைச்சராக உட்கார்ந்திருக்கின்றார். அதுகூட, எடப்பாடி உடனே வரவில்லை, ஜெயலலிதா இறந்ததும் யார் வந்தார்கள் என்றால் ஓ.பன்னீர்செல்வம், அவர் வந்தார். அவர் வந்ததை சசிகலாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனே, அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு நான் தான் அந்தப் பதவிக்கு வரப்போகின்றேன் என்று சசிகலா அவர்கள் அறிவித்தார்கள். அதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அறிவித்து சட்டமன்றத்தில் உட்காருவதற்கு முன்பே பெங்களூரு சிறையில் உட்கார்ந்து விட்டார்கள்.

இப்போது ஜெயிலில் இருக்கின்றார்கள். ஜெயிலில் இருக்கின்ற காரணத்தால் இப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஓ.பன்னீர் செல்வத்தை பொருத்தவரையில் பார்த்தீர்கள் என்றால் ஜெயலலிதா காலில் விழுந்து முதலமைச்சராக வந்தவர். எடப்பாடி பழனிசாமி காலில் விழவில்லை, மண்புழு போல் காலிலே தவழ்ந்து அப்படி முதலமைச்சராக வந்து உட்காரந்திருக்கின்றார். அப்படி முதலமைச்சராக இருக்கின்ற எடப்பாடி தலைமையில் இன்றைக்கு அ.தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஆட்சியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார்களே தவிர, அதற்காக கொள்ளையடிக்கின்றார்களே தவிர, ஊழல் செய்கின்றார்களே தவிர, எங்கு பார்த்தாலும் கரெப்சன் – கமிஷன் – கலெக்சன் நடந்து கொண்டிருக்கின்றதே தவிர, இன்றைக்கு கூட பத்திரிகைகளில் நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள், இந்திய பணத்தை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், அமெரிக்க டாலரையும் கொள்ளையடிக்கக்கூடிய நிலையில் இன்றைக்கு அவ்வளவு மோசமான ஊழல்கள் அமெரிக்க கோர்டில் இன்றைக்கு தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரிக்கக்கூடிய வகையில் போயிருக்கின்றது. 

அந்தளவிற்கு மோசமான நிலைக்கு போயிருக்கின்றது. மாநகராட்சி சார்பாக ஊராட்சி சார்பாக பேரூராட்சி சார்பாக போடப்படக்கூடிய எல்.ஈ.டி பல்பில் எவ்வளவு கொள்ளையடித்திருக்கின்றார்கள் என்று ஆதாரத்தோடு இன்றைக்கு பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டிருக்கின்றது. இப்படி தினம் தினம் ஒவ்வொரு நாளைக்கு ஒரு செய்தி வந்து கொண்டிருக்கின்றது. ஆட்சியை காப்பாற்றுவதற்காக, ஆட்சியைக் காப்பாற்றிவிட்டு கொள்ளையடிப்பதற்காக, அடுத்த முறை தேர்தல் வருகின்ற போது நிச்சயமாக ஜெயிக்கப் போவதில்லை இவர்கள். அதை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டார்கள். இருக்கின்ற வரையில் நன்றாக கொள்ளையடித்துவிட்டு போய்விடலாம் என்று அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில், கிராமப் பகுதியில் இருக்கக்கூடிய உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் எல்லோரும் இப்பொழுது எதற்கு வந்து

உட்கார்ந்திருக்கின்றீர்கள் என்றால், உங்கள் குறைகளை உங்கள் பிரச்னைகளை எங்களிடத்தில் சொல்ல வந்திருக்கின்றீர்கள். என்ன பிரச்னை? சொந்தப் பிரச்னைக்காக நீங்கள் வரவில்லை, பொதுப்பிரச்னை அடிப்படைப் பிரச்னை, கிராமத்தைப் பொறுத்தவரையில் என்ன பிரச்னை இருந்துவிடப்போகின்றது சாலை வசதிப் பிரச்னை - மருத்துவமனை வசதி – பள்ளிக்கூடம் – சத்துணவு மையம் – மகளிர் சுய உதவிக்குழு – முதியோர் உதவித் தொகை – 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், இதுபோன்ற பணிகள் தான் எதுவும் நடக்கவில்லை. இந்தத் திட்டம் எல்லாம் தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்ததுதான். தி.மு.க ஆட்சியில் எப்படி நடந்தது என்று உங்களுக்குத் தெரியும் இன்றைக்கு எதுவும் நடக்க முடியாத நிலை. இன்றைக்கு இதையெல்லாம், எடுத்துச் சொல்லப்போகின்றீர்கள்.

உங்கள் குறைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்து, என்னுடைய முன்னுரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

பின்னர் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கழகத் தலைவர் அவர்கள் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி குறித்து ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:

இப்போது காலையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. பா.ம.க வோடு அ.தி.மு.க கூட்டணியாம். இதே பா.ம.க கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களும், அவருடைய மகனாகிய அன்புமணி ராமதாஸ் அவர்களும் என்னென்ன பேச்சு பேசியிருக்கிறார்கள். நம்மையும் சேர்த்துதான் பேசியிருக்கிறார்கள். அது வேறு. அ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்ந்து ஏற்கனவே ஏழு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்ட போது என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது தெரியும். 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோல்வியடைந்தார்கள் என்று நான் அப்போதே சொன்னேன். சில பேருக்கு புரியவில்லை. 7 தொகுதி என்பது நாடாளுமன்றத் தொகுதிகள் கொடுத்தது. இன்னொன்று எது என்றால் ராஜ்யசபா. ராஜ்யசபா என்பது இரண்டு எம்.பி க்கு சமம். இப்பொழுதும் 7+1 கொடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு பாருங்கள்.

இதே டாக்டர் ராமதாஸ் அவர்கள், சமீபத்தில் அ.தி.மு.கவை விமர்சித்து மேடையில் பேசிவிட்டோ, அறிக்கை விட்டு விட்டோ போகவில்லை. புத்தகமே போட்டிருக்கிறார். அதன் தலைப்பு என்ன தெரியுமா? ‘கழகத்தின் கதை’. அந்தப் புத்தகத்தை போட்ட பெரிய மனுஷன் தான் இன்றைக்கு ஊழல்வாதிகளிடம் கூட உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லை? நான் கேட்கிறேன்.

அப்படிப்பட்ட நிலையில் ஒரு பதவி தேவைதானா? 7 சீட் மட்டுமல்ல, 1 ராஜ்யசபா சீட் மட்டுமல்ல. அதற்குப் பின்னாலும் இருக்கிறது. அதெல்லாம் வெளியில் வரத்தான் போகிறது.

கழகத்தின் கதை என்கிற புத்தகத்தில், எடப்பாடியை மட்டுமல்ல, ஜெயலலிதாவைப் பற்றியும் அவர்கள் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய சொத்து என்ன, அமைச்சர்களின் வண்டவாளங்கள் என்ன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார் ராமதாஸ். இன்றைக்கு கூட்டு சேர்ந்திருக்கிறார் என்று சொன்னால், மக்களைப் பற்றி நாட்டைப் பற்றி கவலைப்படாமல் பணத்தைப் பற்றி கவலைப்பட்டு இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க ஒன்று சேர்ந்திருக்கிறது. நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நேரத்திற்காக அல்ல, சூழ்நிலைகளுக்காக அல்ல, நாட்டு மக்களின் பிரச்னைகளை, குறைகளை தீர்த்து வைப்பதற்காகத் தான் என்பதை உறுதியோடு இங்கே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.