நாங்க இருக்கோம்..! பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை நெகிழ வைத்த இந்திய ராணுவம்!

கர்ப்பிணி பெண்ணை கட்டிலோடு சுமந்து இராணுவ வீரர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற சம்பவமானது சத்தீஸ்கர் மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


சட்டீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் காடுகள் மிகவும் அடர்த்தியாக காணப்படும். இங்கு வழக்கமாக தீவிரவாதிகளின் ஊடுருவலை கண்காணிக்க சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவ்வகையில் நேற்றும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது படேடா கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் பிரசவ வலியில் துடித்து கொண்டிருப்பதாக ஊர் பொதுமக்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.

உடனடியாக சிஆர்பிஎஃப் வீரர்கள் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி முதலுதவி வல்லுநர்களுடன் அங்கிருந்து புறப்பட்டனர். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் அங்கு எந்தவித சாலை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனாலும் முயற்சியைக் கைவிடாத சிஆர்பிஎப் வீரர்கள், கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி 6 கீ.மீ வரை காட்டுப்பகுதிக்குள் தூக்கி சென்றனர்.

பிஜப்பூர் வந்தடைந்த போது, தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் கர்ப்பிணி ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உரிய நேரத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் செய்த மாபெரும் உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டோம் என்று கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவமானது சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.