ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மண்டபத்தில் உள்ள சிற்பங்களில் வீரர் ஒருவர் மற்றொரு வீரரின் காலில் கத்தியால் குத்துவது போல ஒரு சிற்பம் உள்ளது. அந்தச் சிற்பத்தில் கத்தியால் குத்தும் வீரர் சீனர் என்றும் குத்தப்பட்ட வீரர் நாயக்கர் கால படைவீரர் எனவும் இணையத்தில் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஸ்ரீரங்கம் கோவிலில் சீனர் ஒருவருக்கு வைக்கப்பட்ட சிற்பம்..! யார் இவர்? யார் முதுகில் குத்துகிறார் இவர்? வரலாற்று உண்மை!
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் அதன் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய சீன எல்லைப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் சீனா நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சிற்பம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த சிற்பத்தின் குதிரையின் கீழ் உள்ள வீரர் ஒருவர் மற்றொரு வீரரை கத்தியால் குத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தில் வாலால் குத்தும் வீரர் சீனர் என்றும், குத்தப்பட்ட வீரர் நாயக்கர் கால படைவீரர் என்றும் இணையத்தில் வைரலாக தகவல்கள் பரவி வருகின்றன.அந்த காலத்திலேயே சீனர்களின் வஞ்சகத்தை நம் முன்னோர்கள் சிற்பங்களில் கூறியுள்ளனர் என்று பல்வேறு தரப்பினரும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பேராசிரியர் சா.பாலுசாமி என்பவர் இந்த சிற்பம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.இவர் தமிழக சுவர் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். திருப்புடைமருதூர் ஓவியங்கள் குறித்து இவர் சித்திரம் கூடம் என்ற ஓவிய ஆய்வு நூல் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சிற்பத்தை பற்றி பேசிய அவர் இந்த சிற்பம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ள சேஷராயன் மண்டபத்தில் உள்ளது. சேஷராயன் என்பவர் விஜயநகர பேரரசில் தளவாய் மற்றும் பிரதானி போன்ற பொறுப்பில் இருந்தவர். அவருடைய பங்களிப்பு தான் அந்த சிற்பம். இந்த சிற்பத்தில் வாளை கையில் வைத்துள்ளவர் சீனர் இல்லை. வாளை கையில் வைத்திருப்பவர் அணிந்துள்ள மேல்சட்டை ,கால்சராய் ,தொப்பி இவற்றை வைத்துப் பார்க்கும் போது அவர் போர்ச்சுகீசியர் என்பது தெளிவாகிறது.
மேலும் இந்த சிற்பம் விஜயநகரப் பேரரசு காலகட்டத்தை சார்ந்தது. அந்த காலகட்டத்தில் போர்களில் குதிரைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. குதிரைகளை அரேபியர்கள் நமக்கு விற்பனை செய்தார்கள். அரேபியர்களுக்கு சங்ககாலத்தில் சோனகர்கள் என்று பெயர். அரேபியர்கள் கொண்டுவரும் குதிரைகளை துறைமுகத்தில் இருந்த போர்ச்சுகீசியர்கள் வாங்கிக் கொள்வர். அரேபியர்களிடம் இருந்து வாங்கிய குதிரைகளை போர்ச்சுகீசியர்கள் உள்நாட்டிற்கு வியாபாரம் செய்வார். இவ்வாறு ஏராளமான குதிரைகளை கிருஷ்ணதேவராயர் வாங்கியிருக்கிறார்.
போர்ச்சுகீசியர்கள் துப்பாக்கியை கையால தெரிந்தவர்களாகவும் போர்த் திறமை மிக்கவர்களாக இருந்தமையாலும் நாயக்கர்களும் கூட அவர்களை தங்களது படையில் பயன்படுத்திக் கொண்டனர். விஜயநகரப் பேரரசுக் காலத்தில் குதிரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன.ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள அந்த சிற்பமும் விஜயநகரப் பேரரசு காலகட்டத்தில் உருவான சிற்பமே ஆகும். அந்த சிற்பத்தில் குதிரையின் காலடியில் இருக்கும் வீரர் ஒருவர் தனது கையில் இருக்கும் வாளால் மற்றொரு வீரர் கால் பகுதியில் குத்துவது போல அந்த சிற்பத்தில் உள்ளது. விஜயநகரப் பேரரசால் போரின் திறத்தை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட சிற்பம் அது. போர்ச்சுகீசியர்கள் பங்கேற்ற படையில் நிகழ்ந்த ஒரு போர் காட்சி தான் அந்த சிற்பம். சீனர்கள் மற்றும் நாயக்கர்கள் என்று கூறப்படுவது எல்லாம் வதந்தியே. நாயக்க மன்னர்களின் சிற்பங்கள் நம்மிடம் எதுவும் இல்லை .ஓவியங்கள் தான் உள்ளன.சீனர் ஒருவரின் சிற்பம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மண்டபத்தில் இடம் பெற வாய்ப்பே இல்லை எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.