தீபாவளியன்று கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
தீபாவளிக்கு எண்ணெய் குளியல் ஏன்? வீடு தேடி வரும் கங்கா தேவியை நமஸ்காரம் செய்யுங்கள்!
சஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தி, அஷ்டமி, பிரதமை, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம், கேட்டை, திருவோணம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் நீராடலாம் என்றும் அப்பயங்க ஸ்நானம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ன காலத்தில்தான் எண்ணெயை தலையில் வைக்க வேண்டும். அதாவது உதய காலம், சங்கவ காலம், மத்தியான்ன காலம், அபரான்ன காலம், சாயங்காலங்களில் எண்ணெய் குளியல் செய்ய கூடாது. இக்காலங்களில் எண்ணெய் குளியல் செய்தால் மகா தோஷங்கள் உண்டாகும். ஆனால் தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்திட உஷத் காலத்தில் எண்ணை தேய்த்துக் குளிப்பது நமக்கு லட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளுக்கு எல்லாவித சாஸ்திர விதிகளில் இருந்து விலக்கு உண்டு என துலா மகாத்மியம் கூறுகிறது.
பொதுவாக தீபாவளித் திருநாளன்று சதுர்த்தசி திதி வரும். அன்று உஷத் காலம் என்கிற அதிகாலையில் சுவாதி நட்சத்திரத்திற்கு சூரியன் – சந்திரன் இருவரும் சஞ்சரிப்பார்கள்.. இது மிகவும் புண்ணிய தினம் என்றும், அந்நாளில் எண்ணெய்த்தேய்த்து குளியல் செய்ய 4:30 மணி முதல் 6:30 மணி வரை உகந்த நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர். இதற்கு விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறும் உண்டு. நரகாசுரனுடன் பகவான் போரில் இருந்தசமயம் அரக்கர்கள் லட்சுமி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றனர். உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.
இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்களுடன் யமதர்மராஜனும் பணிந்து போற்றினார்கள். இதை கண்ட லட்சுமி, யமனிடம் இப்பண்டிகையை முறையாக கடைப் பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாள். லட்சுமி தேவியின் அந்த உத்தரவை யமதர்மராஜனும் ஏற்றுக்கொண்டார். இதனால் லட்சுமி தேவி மகிழ்ந்து, இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபன அட்சதைகளால் பதினான்கு தர்ப்பணம் செய்து மகிழ்விப்பார்கள் என்று வரம் அளித்தாள். இதுவே தற்போது யமதர்ப்பண தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும். இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.
அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். நீரினுள் ஆல் அரசு புரசு அத்தி மாவிலங்கம் பட்டை போட்டு சுடவைத்து அந்த மருத்துவ குணம் கொண்ட நீரில் ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து லட்சுமி நாராயணனைப் பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும் என்று விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது.