ஃபாஸ்ட்டா வருவாரே தவிர, லேட்டா வர மாட்டார்.

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 22


அதிகாலை 6 மணிக்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் சைதை துரைசாமி தகவல் அனுப்பியதும், தங்கள் வேலை பளுவும், வேலை நேரமும் அதிகரிக்குமே என்று தயங்கினார்கள்.

அவர்களுடைய தயக்கத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட சைதை துரைசாமி, ‘’காலையில் என்னுடன் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், இந்த நேரத்தை வேலை நேரமாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். காலை அல்லது மாலை வேலை நேரத்தில் இதனை கழித்துக்கொண்டு வேலை செய்தால் போதும்’’ என்று அவராகவே கூறியதும், ‘தங்கள் நிலையையும் யோசித்துப் பார்த்து திட்டமிட்டிருக்கிறார்’ என்று மகிழ்ச்சிக்கு மாறினார்கள்.

பொதுவாக தலைவர்கள் ஆய்வுப் பணி செய்யவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அலுவலர்களையும் ஊழியர்களையும் வரச்சொல்வார்கள். அதிகாரிகள் அனைவரும் வந்துவிட்ட தகவல் அனுப்பிய பிறகும் தலைவர்கள் 2 அல்லது 3 மணி நேரம் கூட தாமதமாக வருவதே நடக்கும். இதிலும் சைதை துரைசாமி எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

அதிகாலை ஆய்வுக்கு நேரம் குறித்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே ஆய்வு செய்ய வேண்டிய இடத்துக்கு சைதை துரைசாமி வந்துவிடுவார். நேரம் தவறாமையில் சைதை துரைசாமியை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை எனும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருந்தார். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து கடகடவென ஆய்வுகள் மேற்கொண்டு, என்ன செய்யவேண்டும் என்று பொதுமக்களிடம் கலந்துரையாடி, அதிகாரிகளிடம் பேசி, காரியங்களை விறுவிறுவென முடித்துவிடுவார்.

கள ஆய்வு ரிப்போர்ட்

களத்தில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதோடு மேயர் நின்று விடுவதில்லை. களத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அத்தனை புகார்களையும் மினிட் புத்தகத்தில் குறிக்க வேண்டும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மேல் நடவடிக்கைக்காக, பொதுமக்களின் கோரிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து கண்காணித்து கோரிக்கையை முடித்து வைக்க வேண்டும். கள ஆய்வு மேற்கொண்டால், அங்கு பொதுமக்கள் தெரிவித்த குறைகள் நிச்சயம் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

அதேபோன்று அவ்வப்போது மண்டல அலுவலகங்கள், குப்பை கொட்டும் வளாகம், பள்ளிகள், மழைநீர்க் கால்வாய் பணிகள், அம்மா உணவகம், பூங்காக்கள், மெரினா பீச், சாலைப் பணி நடைபெறும் இடங்கள் போன்ற மாநகராட்சித் துறைகள் மட்டுமின்றி, அரசு துறைகளான பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, வீட்டுவசதி வாரியம் குடிசை மாற்று வாரியம், வருவாய்த் துறை, மீன் வளர்ச்சித் துறை என எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அவ்வப்போது எதிர்பாராமல் சென்று, அதிரடி ஆய்வு நடத்துவது மேயரின் பழக்கம். அவ்வப்போது குறைகள் கண்டறியப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்களிடம் மேயருக்கு நல்ல வரவேற்பும் மதிப்பும் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மாநகராட்சி மீது மக்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

- நாளை பார்க்கலாம்