இட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..! சீமான் ஆவேச கோரிக்கை.

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழக மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் வகையில் 162வது சட்டப்பிரிவின்படி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கனவிற்கு வாசல்திறந்து விடும் வகையிலான இச்செயல்பாடு சற்றே ஆறுதளிக்கக்கூடிய நல்லதொரு முன்நகர்வாகும். மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு மாநில அரசின் உரிமைகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் எதிராக நிற்கும் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திராது துணிந்து முடிவெடுத்தது நெஞ்சுரமிக்க முடிவாகும். இதேபோன்று மற்ற விவகாரங்களிலும் மக்களின் உணர்வுகளை மதித்திட்டு துணிவோடு முடிவெடுத்து மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தின் 24 மருத்துவக்கல்லூரிகளிலிருந்து மத்தியத்தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒற்றை இடத்தைக்கூட வழங்காது மொத்தமாய் மத்திய அரசு மறுத்திருப்பது மிகப்பெரும் சமூக அநீதியாகும். இதற்கெதிராகச் சட்டப்போராட்டம் நடத்தியும் உரிய நீதி கிடைக்கப்பெறாத நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் மருத்துவ மேற்படிப்புக் கனவு முற்றுமுழுதாய் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அதற்கு உரிய தீர்வைப் பெற்றுத்தரும் பொருட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு வழங்கிட தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இத்தோடு, 30 ஆண்டுகளாய் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கோப்பில் கையெழுத்திட ஆளுநர் மறுத்து வரும் நிலையில் தமிழக அரசு இவ்விவகாரத்தில் அம்மையார் ஜெயலலலிதா காட்டிய முனைப்பையும், உறுதிப்பாட்டையும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும். எழுவர் விடுதலைக்காக தமிழகச்சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளைக் கடந்தும் அவர்களை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் கையெழுத்திட மறுப்பது சனநாயகத்தைச் சாகடிக்கும் பச்சைப்படுகொலையாகும். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட தமிழக அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து நிறுத்துவதென்பது மக்களாட்சித்தத்துவத்திற்கே எதிரானதாகும். சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீகத்தின் அடிப்படையிலும் விடுதலைக்கான முழுத்தகுதியையும் கொண்டிருக்கிற ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய மறுப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும். எழுவரையும் விடுவிக்க வேண்டும் என்பது உலகெங்கும் 12 கோடித் தமிழ்த்தேசிய இன மக்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஆகவே, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சட்டத்தின்படி இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி 161வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலையை உடனடியாகச் சாத்தியமாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.