தாம்பூலத்தில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் ஏன்! அம்பிகையின் அம்சமே வெற்றிலை!

தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.


உயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம்.'அதிதி' என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, 'பசி ' என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும். அவர் கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஆனால் அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் அளித்தல் வேண்டும்.

வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும். வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.

எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்குப் பின் தாம்பூலம் படைத்து வழிபட வேண்டும். சாக்தர்கள் தங்கள் பூஜையில், தேவிக்கு, முக்கோணவடிவிலான தாம்பூலம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.

தாம்பூல பூரித முகீ என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.இதன் பொருள்'தாம்பூலம் தரித்ததால்,பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்'என்பதாகும். விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, 'நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர்.

தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம். திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது. விசேஷங்களுக்கு அழைக்கச் செல்லும்போதும் தாம்பூலம் வைத்து அழைப்பது மிகுந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப் படுகிறது.விருந்து உபசாரங்கள் தாம்பூலத்துடனேயே நிறைவு பெறுகின்றன.

வெற்றிலை போடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றாலும் இது சத்வ குணம் கொண்டதல்ல. ஆகவேதான் பிதுர் தினங்களில் வெற்றிலை போடலாகாது.