திருவாரூரில் பா.ஜ.க வேட்பாளர் மு.க.அழகிரி! ஸ்டாலினுக்கு எதிரான அதிரடி வியூகம்!

திருவாரூரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்திருந்த அழகிரியை பா.ஜ.க தங்கள் கட்சியின் வேட்பாளராக்க திட்டமிட்டுள்ளது.


இந்த மாத இறுதியில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக திருவாரூர் இடைத்தேர்தல் கருதப்படுகிறது. திருவாரூரில் வெற்றி பெறும் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமான தேர்தல் என்பதால் இதில் போட்டியிட்டு தங்கள் பலத்தை காட்ட ஒவ்வொரு கட்சியும் வியூகம் வகுத்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால் தி.மு.க வேட்பாளராக மு.க.ஸ்டாலின் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

   இது தொடர்பாக ஸ்டாலின் தனக்கு நெருக்கமான தி.மு.கநிர்வாகிகளுடன் மிகத் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தி ஆர்.கே.நகரில் ஏற்பட்டது போல் ஆகிவிட்டால் சிக்கலாகிவிடும் என்று ஸ்டாலின் கருதுகிறார். மேலும் தி.மு.க தலைவராக தான் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்றும் அவர்நினைக்கிறார்.

   எனவே திருவாரூர் தொகுதியில் தானே திருவாரூர் தொகுதியில் களம் இறங்கினால் கலைஞர் மறைவை தொடர்ந்து ஏற்பட்ட அனுதாப ஓட்டுகள் அவரது மகன் என்ற வகையில் தனக்கு கிடைக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார். எனவே திருவாரூரில் ஸ்டாலின் களம் இறங்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று கடந்த வருடமே அழகிரி முடிவெடுத்துவிட்டார்.

   அரசியல் ரீதியாக அங்கீகாரம் இல்லாமல் தவிக்கும் அழகிரி திருவாரூர் தேர்தலை தான் மலை போல் நம்பியுள்ளார். திருவாரூரில் களம் இறங்கி தி.மு.கவின் வெற்றியை தடுத்தால் தான் அந்த கட்சிக்குள் தன்னால் மீண்டும் நுழைய முடியும் என்பது அழகிரியின் நம்பிக்கை. இதற்காக திருவாரூரில் களம் இறங்குவதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே அவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

  இதனிடையே அழகிரியை பா.ஜ.கவில் இணைப்பதற்கான வேலைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக அவர் பா.ஜ.கவில் இணைந்துவிட்டால் திருவாரூர் வேட்பாளராக அழகிரியை பா.ஜ.க அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் திருவாரூரில் சுயேட்சையாக களம் இறங்கும் அழகிரிக்கு பா.ஜ.க ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.