சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு..? எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் போர்க்குரல்

சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 22.21 இலட்சம் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களும், 119 தொழிற்பேட்டைகளும், 5 மகளிர் தொழில்பூங்காக்களும் உள்ளன. சுமார் 1.4 கோடிபேர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர், தமிழக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீகிதம் பங்களிப்பு செலுத்துகிறது. ஊரடங்கிற்கு முன்னரே சிறு,குறு, நடுத்தரத்தொழில்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

கொரோனா தொற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேலும் மிகக்கடுமையாக பாதித்துள்ளது. இது தமிழகப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்திடும்; வேலையின்மை பிரச்சனையும் மிகவும் கடுமையாகிடும்.

 எனவே, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக நிபந்தனைகளின்றி 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும். ஓராண்டு காலத்திற்கு இந்த கடனுக்கு வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அதன் பிறகு, வட்டியையும், அசலையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும் முறையில் ஆணைகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் கடந்த கால விற்றுமுதலின் அடிப்படையில் கடன் வழங்குவதும் வட்டி சலுகைகளுடன் கடன் வழங்குவதும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். மேற்கண்ட நிதிஆதாரத்தை வட்டியில்லாத தவணை முறையில் ஏற்பாடு செய்கிறபோது, உடனடியாக ஆளுஆநு நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி, அவர்களை தக்கவைத்து தொழிலை மீண்டும் தொடங்கி நடத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

சிறிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொகையை செலுத்தி மூலபொருட்களை வாங்குகின்றன. பிறகு உற்பத்தி செய்யும் காலமும், விற்பனை செய்து அந்த பொருளுக்கான தொகையை பெறுவதற்கான காலமும் சேர்ந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு மேலாகி விடுகிறது. ஆனால், மாதம்தோறும் 18 சதம் அல்லது 24 சதம் வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் சிறிய நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாமல் மூடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றன. ஆகவே,சிறு மற்றும் குறு தொழில்களுக்கு முன்பு மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டது போல 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்த வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு 45 நாட்களுக்குள் பணம் வழங்கப்பட வேண்டும் என்று விதியிருந்தாலும் 100 நாட்களுக்கு மேல் பணம் தராமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் இவ்வாறு கொடுக்கப்பட வேண்டிய தொகை ரூபாய் 5 லட்சம் கோடி என்று தெரிவித்திருக்கிறார்.

எனவே, உடனடியாக நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் கறாராக 45 நாட்களுக்குள் இந்த தொகையினை கொடுக்க வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

வெளி மாநிலத்தில் இருந்து இதுவரை 40 சதவீதம் பேர் வேலை செய்து வந்தனர், தற்போது பெரும்பாலும் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டதால், தொழில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். ஆகவே தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிப்பு முடித்தவர்களை சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு நியமித்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவர்களுக்கு, தொழில் திறன் ஏற்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ரு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.