கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் மகேஸ்வரம் சிவ பார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று திறக்கப்பட்டது.
உலகிலேயே உயரமான சிவலிங்கம் தரிசனம்! குகைக்குள் 108 சிவலிங்கங்கள்!
இங்கு அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில், 8 நிலைகளைக் கொண்டு (8 மாடி) அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வியாச மகரிஷி, கால பைரவர், காஷ்யப மகரிஷி, அத்ரி மகரிஷி, ஜமதக்னி மகரிஷி, பரத்வாஜ முனிவர், அகத்தியர், வசிஸ்டர், கெளதம மகரிஷி, பிருகு மகரிஷி, விஸ்வாமித்திரர், பரசுராமர் மற்றும் பாஸ்கராச்சார்யா ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், நாட்டிலுள்ள முக்கிய சிவாலயங்களில் காணப்படும் 108 சிவலிங்கங்கள் இதன் உள்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோயில் நிர்வாகம் கடந்த 2012ல் மிகப்பெரிய சிவலிங்கம் அமைக்க முடிவு செய்தது.அதன்படி தற்போது ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சிவலிங்கம் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பணி நிறைவடைந்ததையடுத்து பக்தர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது.
மேலும், இச்சிவலிங்கத்தின் உள்பகுதியில் பக்தர்கள் தியானம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், அபிஷேகம் செய்வதற்காக சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, உலகிலேயே அதிக உயரம் கொண்ட சிவலிங்கமாக இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆப் ரெக்கார்டு) கடந்த ஜனவரி மாதம் இடம்பிடித்தது. அதன் பின்னர் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு என்ற சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
இந்த சிவலிங்கம் திறப்பு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி சிவலிங்கத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெய்யாற்றின்கரை தொகுதி எம்.எல்.ஏ. ஆன்சலன், நெய்யாற்றின்கரை வட்டாட்சியர் மோகன்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.