பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்.
கமல் கட்சியின் வேட்பாளராகும் பவர் ஸ்டார்! தென்சென்னையில் தமிழச்சியை எதிர்த்து களம் காண்கிறார்!
அவ்வப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து நகைச்சுவையான பீதி கிளப்புவார் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த வகையில் தற்போது மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் தமிழக துணை தலைவராக பவர் ஸ்டார் சீனிவாசன் பொறுப்பு வகிக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன் அவர் இந்த கட்சியில் சேர்ந்தார். தற்போது இந்த கட்சிதான் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் உள்ளது.
தான் போட்டியிடுவது பற்றி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். ராம்தாஸ் அத்வாலே சில நாட்களில் சென்னை வர உள்ளதாகவும் அவரிடம் ஆசி பெற்று விட்டு வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் களத்தில் பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் கூறிய பவர் ஸ்டார் சீனிவாசன் பொள்ளாச்சி விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் சென்னை மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ள அவர், தனக்கு எப்போதுமே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும் கூறியுள்ளார். அவரே சந்திக்காத தேர்தலை பவர் ஸ்டார் சீனிவாசன் சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதுமே தான் செல்லப்பிள்ளை என்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.