அமெரிக்காவில் சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஓட்டலில் வேலை செய்த பெண்ணுக்கு வாடிக்கையாளர் ஒருவர் கார் வழங்கி அசத்தியிருக்கிறார்.
தினமும் 22கிமீ நடையாய் நடந்த ஓட்டல் பெண் ஊழியர்! இரக்கப்பட்டு புத்தம் புது கார் பரிசளித்த கஸ்டமர்! ஏன் தெரியுமா?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைசேர்ந்த அட்ரியன்னா எட்வர்ட்ஸ் என்ற பெண் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்வெஸ்டன் நகரில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். குடும்ப பொருளாதார மந்த சூழ்நிலை காரணமாக தனக்கென ஒரு வாகனம் வாங்க முடியாமல் ஓட்டலில் வந்த வருமானத்தை வைத்து கார் வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஓட்டலுக்கு சென்ற அந்த பெண் ஊழியர் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு பரிமாறினார். அப்போது அட்ரியன்னாவின் குடும்ப சூழ்நிலை குறித்து எதேச்சையாக அந்த வாடிக்கையாளர் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த புறப்பட்டு சென்ற அந்த வாடிக்கையாளர் சில மணிநேரங்கள் கழித்து ஒரு காருடன் வந்து உணவகத்தில் நின்றார்.
பின்னர் கார் சாவியை எடுத்து அந்த பெண் ஊழியரிடம் கொடுத்து, இந்த காரை பரிசாக தருகிறேன் எனக் கூறினார். அட்ரியன்னாவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஏதோ விளையாட்டுக்காக அப்படி செய்கிறார் அந்த வாடிக்கையாளர் என நினைத்தார். பிறகு உண்மையில் கார் பரிசாக கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ந்துள்ளார்.
பின்னர் அந்த வாடிக்கையாளர் அட்ரியன்னாவிடம், நீங்களும் முன்னேறி பிறகு கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள் என கூறியுள்ளார். இதனால் இனி அந்த பெண் நடந்து வராமல் காரில் வருவதால் நேரம் மிச்சமாகும். தன்னுடைய மேல்படிப்பையும் தொடரலாம் என்ற செய்தி மகிழ்ச்சிதான் நமக்கு.