சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் புதிய மாற்றம்?

ஜூன் 1ம் தேதி நிகழ்வுகள்.


கடந்த ஜூன் 1ம் தேதி முக்கியமான நாள். சென்னை பத்திரிகையாளர் மன்றம் சவுக்கு உள்ளிட்ட பிளாக்மெயிலர்களின் நரம்பு மையமாக சீரழிந்த நிலையில், அதனை மீட்டெடுக்க பல கட்டப் போராட்டங்கள் நடந்தன. மே 26 ஆம் தேதி ஒரு போலி பொதுக்குழுவைக் கூட்டி போலி நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல்வாங்கிவிட, பாரதி தமிழன் காய் நகர்த்திய சூழலில், இந்த ஏமாற்று நாடகத்தை தடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற சீரழிவு, ஊழல் பற்றி சமூக ஊடகங்கள் காரசாரமாகப் பேசத் தொடங்கின. சமூக அக்கறை கருதி, தி இந்து நிர்வாகம் தந்த அழுத்தத்தால் அங்கு பணிசெய்யும் பாரதி தமிழன் மே 27 ஆம் தேதி விலகல் கடிதம் கொடுத்தார்.. ஆகஸ்ட் 23இல் நடந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக பார்தி தமிழனுக்கு அழுத்தம் கொடுத்து, வழிகாட்டும் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

திரு.N.ராம், திரு.நக்கீரன் கோபால் தலைமையிலான இந்த வழிகாட்டும் குழு மே 31 ஆம் தேதி கூடிப் பேசியது. மன்ற நிர்வாகத்தை கையில் எடுக்கவும், உறுப்பினர்களைச் சேர்த்து தேர்தல் நடத்தவும் 7 பேர் மட்டும் கொண்ட ஒரு செயல்பாட்டுக்குழு நியமிக்கப்பட்டது. இந்த செயல்பாட்டுக்குழு ஜூன் 1 - நேற்று நேரடியாக பத்திரிகையாளர் மன்றத்துக்குச் செல்வது என்றும், நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறுமாறு தற்போதைய நிர்வாகிகளிடம் சொல்வது என்றும், முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி திரு.N.ராம், திரு.நக்கீரன் கோபால் தலைமையில் நேற்று மாலை சென்ற செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள், தற்போதைய நிர்வாகிகளிடம் தொடர்ந்து வற்புறுத்திப் பேசியபின், நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறுவதாக தற்போதைய நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்கள் கடிதத்தில் கூறியபடி நடந்துகொண்டால் பத்திரிகையாளர் மன்றம் 3 மாதங்களுக்குள் புத்தெழுச்சி பெறும்.

இதுவரை உறுப்பினர் ஆக்கப்படாத மூத்த ஊடகவியலாளர்கள், இளம் ஊடகவியலாளர்கள், பெண் ஊடகவியலாளர்கள் அனைவரும் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள். ஜனநாயக பூர்வமாக தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அறிவையும், திறன்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் மையமாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் புத்தெழுச்சி பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.