சென்னை: பூங்கா ரயில் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் நாய் சின்னப்பொண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் படியில் தொங்கினால் துரத்துமே..! நம்ம சின்ன பொன்னு நாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை..! பயணிகள் சோகம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூங்கா புறநகர் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சின்னப்பொண்ணு எனும் நாய், கடந்த சில மாதங்களாக, காவல் பணியில் ஈடுபட்டது. இதனை ரயில்வே போலீசாரும் ஊக்குவித்து வந்தனர். இதன்படி, ரயிலில் தொங்கியபடி பயணம் செய்வோர், ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் உள்ளிட்டோரை எச்சரிக்கும் வகையில் சின்னப்பொண்ணு நாய், அவர்களை துரத்திச் சென்று குரைக்கும். இதனால் பயந்த மக்கள், ரயில் நிலைய விதிமுறைகளை சரியாக பின்பற்றி வந்தனர்.
இந்நிலையில், ஒரு வாரம் முன்பாக, சின்னப்பொண்ணு நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுவரை உடல்நலம் சீராகவில்லை. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அந்த நாயை பராமரிக்கும் பணியை சென்னையை சேர்ந்த விலங்குகளை பாதுகாக்கும் தன்னார்வலர் பிரியங்கா என்பவர் மேற்கொண்டார்.
அவர் இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் தகவல் தெரிவித்து, நிதி திரட்டினார். தற்போது, தேவையான நிதி கிடைத்துவிட்டதால், சின்னப்பொண்ணுவை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர் ஃபேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார்.