ஜெயலலிதாவின் வாக்குகள் எங்கே போனது? எடப்பாடி தலைமைக்குத் தகுதி இல்லையா?

எப்படிப்பட்ட சூழலிலும் அ.தி.மு.க. வாக்குவங்கிகள் சரிந்ததே இல்லை. கூட்டணிகள் கைங்கர்யத்தால்தான் அ.தி.மு.க.வை தி.மு.க. வெற்றி அடைந்திருக்கிறதே தவிர, ஒரு தடவைகூட அ.தி.மு.க. வாக்கு வங்கியை குலைக்க முடிந்ததில்லை.


ஆனால், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தனது வாக்கு வங்கியில் சுமார் 20 சதவீதத்தை இழந்துள்ளது. அதாவது 42 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி 22 சதவீதமாகக் குறைந்து விட்டது. இதற்கு ஜெயலலிதா மரணம், தினகரன் பிளவு ஆகியவற்றை மட்டும் காரணமாகக் காட்ட முடியாது. ஏனென்றால், எம்.ஜி.ஆர். என்ற பெரிய பிம்பம் சரிந்தபோதே, அ.தி.மு.க. வாக்கு வங்கி சரியவில்லை. எம்.ஜி.ஆர். என்ற பிம்பத்தை தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா இருந்தார். ஆனால், இப்போது அப்படியொரு தலைமை அ.தி.மு.க.வில் இல்லை என்பதுதான் உண்மை.

எடப்பாடி தலைவராக இருக்கிறார் என்றாலும், அவர் மட்டுமே தலைவர் அல்ல. அங்கே அவருக்குப் போட்டியாக பன்னீர்செல்வம் இருக்கிறார். அதாவது அ.தி.மு.க. கட்சிக்குள் இரண்டு கோஷ்டி தனித்தனியே பிரிந்து நிற்கிறது. அதோடு, தமிழகத்தில் பலராலும் மறுக்கப்பட்ட பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்ததற்கு மிக முக்கிய காரணம். ஏனென்றால், பா.ஜ..க. என்றாலே ஜெயலலிதாவுக்கு ஆகாது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று ஜெ. சொன்னாரோ, அதே கட்சியுடன் கூட்டணி வைத்து கட்சியையும் கரைத்துவிட்டார்கள். 

மோடி எதிர்ப்பில் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகவும் தெளிவாக இருந்தனர். அதனாலே மிக எளிதில் மக்கள் மனதைப் படித்துவிட்டார்கள். மோடிக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடியிடமோ அவரது கூட்டணிக் கட்சிகளிடமோ இல்லை. ஆகவே பெரும் சறுக்கலை சந்தித்திருக்கிறது. இனியாவது உண்மையை அ.தி.மு.க. உணர வேண்டும்.