ஜெய்ப்பூர்: போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை மீண்டும் பிடித்து, அரை நிர்வாணமாக போலீசார் ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் ஜட்டி மற்றும் பனியன்! கைகளில் சங்கிலி! 13 பேரை நடுரோட்டில் இழுத்து வந்த போலீஸ்! அசர வைக்கும் காரணம்!
ஹரியானாவைச் சேர்ந்தவன் விக்ரம் குஜ்ஜார். 28 வயதாகும் இவன், பிரபல ரவுடி எனக் கூறப்படுகிறது. இதன்பேரில் விக்ரமை சிரமப்பட்டு ராஜஸ்தான் போலீசார் சமீபத்தில் கைது செய்து, போலீஸ் நிலையத்தில் வைத்து, விசாரித்து வந்தனர். மேலும், விக்ரம் தங்கள் பிடியில் உள்ளதாக, ஹரியானா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே திடீரென நள்ளிரவில் போலீஸ் லாக்கப்பை உடைத்த 15 பேர் கொண்ட கும்பல், விக்ரமை காப்பாற்றியது.
இது ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தலைகுனிவு தரும் சம்பவமாக அமைந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, கடந்த 1 மாதமாக தீவிரமாக போலீசார் தேடிவந்தனர். இதன்படி, தற்போது அந்த கும்பலில், 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை தண்டிக்கும் வகையில், ஜட்டி, பனியனுடன் அரை நிர்வாணமாக, 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்தே போலீசார் அழைத்துச் சென்றனர்.
13 கைதிகள் ஜட்டி, பனியனுடன் நடக்க, அவர்களை சுற்றி 100 போலீசார் காவலுக்கு நடந்து வர, அரங்கேறிய இந்த சம்பவத்தை பலரும் செல்ஃபோனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிரவே, தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.