பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற நாள் முதல், இந்தியாவின் உள்ள ஒட்டுமொத்த துறைகளும் வீழ்ச்சியடைந்து வருகிறது. அதற்கு பிறகான சீரமைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கினாலும். பல்வேறு தரப்பினரின் விமர்ச்சனங்களுக்கு ஆளாகவும் நேரிடுகிறது.
இந்தியா இன்னொரு சோமாலியாவாக மாறும்! நிர்மலா சீதாராமனின் கார்ப்பரேட் வரிச்சலுகைக்கு எச்சரிக்கை செய்யும் பொருளாதார நிபுணர்கள்!
இந்த நிலையில் கடந்த மாதம் இந்திய பொருளாதாரத்திற்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எனப்படும் GDP. 5.7 சதவிகித அளவிற்கு குறைந்துள்ளதாகவும், முன்னேறும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் 6 வது இடத்தில் இருந்து இந்தியா 5 வது இடத்திற்கு இறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து. நாடு படுமோசமான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு ஒத்தார் போல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர் அளித்துள்ள பேட்டியில். பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் வளர்ச்சி தரம் குறைந்து மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாகவும். இதற்குமேல் நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்து விடும் என எச்சரித்தனர்.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட ஐந்து விரல்களை உயர்த்தி நாட்டின் உற்பத்தி வீழ்ச்சியை கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மறுபடியும் இந்தியாவிற்க்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்.
அதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதன் முக்கிய அம்சமாக அக்டோபர் 1 2019க்கு பிறகு இந்தியாவில் தொடங்கப்படும் உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி 22 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும். அதன்படி 1.45 லட்சம் கோடி அளவிற்கு வரிச்சலுகைகளை அறிவித்தார். மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்த சில நிமிடங்களில்.
இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2000 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனையை செய்திருந்தது. இதற்கு முன்பு 2009 ஆண்டு மே மாதம் 18 தேதி 2111 புள்ளிகள் ஒரே நாளில் உயரந்ததுவே சாதனையாக இருந்தது.
மேலும் இந்த அறிவிப்புகளோடு ஜிஎஸ்டியில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ள மத்திய நிதியமைச்சர்.இதன் மூலமாக இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என கணக்கிட்டுள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையினால் FCNR முதலீடுகள் ஆகஸ்ட் 23ம் தேதியில் இருந்து செப்டம்பர் 3 வரை கிட்டத்தட்ட 5486 கோடி வரை திரும்ப பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடியை இலக்காக கொண்டு பயணிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் மத்திய நிதியமைச்சர்.
2025 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இருக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்த தினத்தில் இருந்து. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய பங்குச்சந்தைகளும். வணிக நிறுவனங்களும் வீழ்ச்சியை கண்டுள்ளன.
பனியன் உற்பத்தி முதல் பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறை என அத்தனையும் ஆட்டங்கண்டு கிடக்க. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி இல்லை என ஒவ்வொரு மேடையாக பேசி வரும் நிதியமைச்சர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்காவது முறையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி சலுகைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிற சலுகைகளால் சரிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க முடியுமா என்று ஆராய்கிறது இந்த கட்டுரை.
ஆசிய கண்டம் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் ஒப்பிடுகையில். 48.3 சதவிகிதம் கார்பரேட் வரி விதித்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுவே அமெரிக்காவில் 25.89 சதவிகிதமும். இங்கிலாந்தில் 19 சதவிகிதமும்.ஆசியாவிலேயே 15 சதவிகித வரியுடன் ஹாங்காங் முதலிடம் வகிக்கிறது. இந்த அதிகபட்ச வரி கொள்கையினாலேயே பல்வேறு நாடுகள் இந்தியாவில் தொழில் தொடங்க தயங்குகிறார்கள்.
2017-18 நிதியாண்டில் மட்டும் சுமார் 5 லட்சத்து 38 ஆயிரத்து 744 கோடி ரூபாய் கார்பரேட் வரிகள் மூலம் வசூல் பண்ணியதாத தெரிவிக்கிறது அந்த ஆண்டின் பட்ஜெட் குறிப்பேடு.
கார்பரேட்டுக்கு அடுத்ததாக வெல்த் டாக்ஸ். கஸ்டம்ஸ் . யூனியன் எக்ஸைஸ் டூடி. சேவை வரி . தனி நபர் வரி என 2017-18 ஆண்டில் மட்டும் 19 லட்சத்து 11579 லட்சம் கோடி வரியாக மட்டுமே எட்டியுள்ளது இந்திய அரசு.
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 17 லட்சத்து 79 நிறுவனங்களில்.பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மற்றும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 34 சதவிகித நிறுவனங்கள். அதாவது 5.43 லட்சம் நிறுவனங்களின் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அறிக்கை.
மேலும் அந்த அறிக்கையில். 2019 ஜீன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில் 1390 நிறுவனங்கள் நஷ்டத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும். 38858 நிறுவனங்கள் வேலை நிறுத்தம் . பணியாளர்கள் பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாகவும். 103 நிறுவனங்கள் மீண்டும் தங்களது உற்பத்தியை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கிறது.
கார்ப்பரேட் விவகார அமைச்சக தகவல்படி, மகாராஷ்டிராவில் 353,556 எண்ணிக்கையிலான நிறுவனங்கள் உள்ளன என்றும், ஜூன் 30. 2019 ஆம் தேதி நிலவரப்படி டெல்லியில் 322,044 நிறுவனங்களும் மற்றும் மேற்கு வங்கத்தில் 197,823 நிறுவனங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கல்கள் சூழ்ந்து காணப்படும் இந்த வேளையில். மூடப்பட்ட நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாகவும். மேலும் பல புதிய வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் விதமாக இந்தியாவில் இயக்கி வரும் அனைத்து கார்பரேட் நிறுவனங்களுக்கும் 1.45 லட்சம் கோடி அளவிற்கு வரித்தள்ளுபடியினை அறிவித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வரிகள் மற்றும் விளம்பரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பிற துறைகளுக்கு கொடுக்க தவறியதன் விளைவாக. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 7 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதை கணக்கிட்டால். மனித உழைப்பிற்க்கான வருமானத் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த அரசு தவறி விட்டது என்றே கூற வேண்டும்.
அதேநேரத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை மொத்தமாக வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன்கள் கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 72 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதும்.வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய ரூபாய்களை மீட்க இந்த அரசு முயற்சி செய்யாதது.
நட்டத்தில் பயணிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவன பிரச்சினைகளுக்கு முடிவுகள் காணாமல். தனியார் நிறுவன முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதும். இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஒருவித தாழ்வு மனப்பான்மையை வளர்த்துள்ளது எனலாம்.
2016ல் கச்சா எண்ணெய் 110 டாலர் விலையிலிருந்த போதும் இந்தியாவில் 60 ரூபாய்க்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டது பெட்ரோல். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக 60 டாலர்கள் வரை விலை இறங்கியிருந்தாலும் சில்லறை விற்பனையில் 75 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுவதால்.
போக்குவரத்து செலவினங்களால் கனரக வாகனங்களின் வாடகை உயர்வு மற்றும் அதிகப்படியான டோல்கேட் கட்டணங்களால் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 15 ரூபாயாக இருந்த பெல்லாரி வெங்காயம் தற்போது 40 ரூபாயாக உயர்ந்துள்ளதும். பருப்பு விலை 120 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எரிவாயு சிலிண்டர் 650 வரை உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு வரியினை குறைத்தால் பொருளாதார புள்ளிகளில் தான் ஏற்றம் ஏற்படும். மற்றபடி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு சோமாலியா போன்ற நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அஞ்சுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இது ஒருபுறமிருக்க. இந்திய பங்குச் சந்தையில், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது அனைத்து துறைகளும். ஜீன் 5ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தனது முதல் உரையை வாசித்த நாள் முதல் இதுவரை, சென்செக்ஸ் கிட்டத்தட்ட 7000 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஆட்டோமொபைல். வங்கிகள். ரியல் எஸ்டேட். மென்பொருள். மருத்துவம். தொலைத்தொடர்பு என செபியில் பட்டியலிடப்பட்ட 90 சதவிகித நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டு 380 ரூபாய் வரை இருந்த எஸ் வங்கியின் பங்குகள் தற்போது 53 ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளதும்.
கடந்தாண்டு 193 ரூபாய் அளவிற்கு இருந்த இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் பங்குகள் 56 ரூபாயாக சரிந்துள்ளதும். கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் கோடி அளவிற்கு சிறு முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கிறது செபியின் அறிக்கை.
அதுமட்டுமின்றி அதிகப்படியான வரி விதிப்பினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகி காஃபி டே நிறுவனத்தின் தலைவர் மரணம். பேடிஎம் நிறுவனத்தின் 4200 கோடி நஷ்டம். வோடபோன். ஏர்டெல் நஷ்டம். என மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் மட்டும் கடந்த ஆகஸ்ட் 18 வரையிலான ஒரு வார காலத்தில் சுமார் 84,354 கோடி நஷ்டத்தினை சந்தித்துள்ளது பட்டியலிடப்பட்டுள்ள முண்ணனி நிறுவனங்கள்.
இப்படி ஒவ்வொரு துறையிலும் சத்தமில்லாமல் சரிவினை சந்தித்து வருகிற வேளையில். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்களால். ஏற்கனவே ஏற்பட்டுள்ள இழப்பினை யார் ஈடுகட்டுவது என விழிபிதுங்கி போயுள்ளனர் இந்திய வணிகர்கள்.
சமையல் புளி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் முக்கியமான போக்குவரத்து செலவினங்களைக் கட்டுப்படுத்தும் பெட்ரோல் மீதான வரிகள் மற்றும் டோல்கேட் கட்டணங்களை குறைத்தால் தான் உள்நாட்டு வணிகமும் மக்களின் அத்தியாவசிய தேவைகளும் கட்டுக்குள் வரும்.
இதற்கிடையே 2014ல் ரூ.54,90,763 கோடியாக இருந்த மத்திய அரசின் கடன் தற்போது ரூ.82,03,253 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் உலக வங்கியிடம் கடன் வாங்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்று தெரிய வருகிறது.
ஏற்கனவே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு மற்றும் வங்கிகளில் கடன் மோசடி என்று பரவலாக அறியப்படும் இந்த வேளையில். 1.45 லட்சம் கோடி அளவிற்கு வரித் தள்ளுபடியைக் கொடுத்தால். எவ்வளவு நிறுவனங்கள் இதை ஏற்க தயாராக உள்ளனர். மற்றும் எவ்வளவு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில் துறையை இங்கு நிறுவ தயாராக உள்ளது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மணியன் கலியமூர்த்தி