ராஜேந்திர பாலாஜி மோடியின் ஜால்ராவா அல்லது எடப்பாடியின் ரவுடியா?

ராகுல்காந்தியை இந்தியராகவே ஏற்றுக்கொள்ள மாட்டேன்,


அவர் யார் மடியில் அமர்ந்து மொட்டை போட்டார் என்று சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். பல இடங்களில் அவரது உருவப்பொம்மையை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மோடி எங்கள் டாடி என்று தைரியமாக பேசத்தொடங்கிய ராஜேந்திரபாலாஜியின் சமீபத்திய பேச்சுகள் கலவரத்தை துண்டக் கூடிய வகையிலும்,கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் இருக்கின்றன. அதனால் இவர் மோடியின் ஆளா அல்லது எடப்பாடியின் ஆளா என்பதே புரியவில்லை என்று பதிவு போட்டிருக்கிறார் சாவித்திரி கண்ணன்.

இவர் திமுகவை விமர்சிக்கும் போதும், காங்கிரசை விமர்சிக்கும் போது வழக்கமான அதிமுக காரராக இல்லாமல் பாஜகவின் குரலாக வெளிப்படுவதை,குறிப்பாக ஆர்,எஸ்.எஸ். அமைப்புகள் போன்றவற்றின் குரலாக வெளிப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.

‘‘திமுக ஒரு தேச விரோதக் கட்சி.தடை செய்யப்பட வேண்டிய கட்சி. இந்துக்கள் மனதை புண்படுத்தும் கட்சி’’ என்றதாகட்டும், ராகுல் காந்தி ஒரு இந்தியரல்ல, அவரை ஒரு போதும் இந்தியராக ஏற்க முடியாது. இந்து வழக்கப்படி அவர் தாய் மாமன் மடியில் அமர்ந்து தானே முடி வெட்டியிருப்பார். அவர் தாய் மாமன் இத்தாலியன்தானே! என்றதாட்டும். அவர் அதிமுகவின் குரலாக இல்லை.

கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்திய கமலஹாசன்...குடும்பத்திற்கே தலைவராக முடியாதவர் நாட்டுக்கு எப்படி தலைவராக முடியும்? என்று ரொம்ப பெர்சனலாகத் தாக்கும் ராஜேந்திர பாலாஜி இதையே தன் முன்னாள் தலைவி ஜெயலலிதாவிற்கும்,இன்றைய அவரது தலைவர் மோடிக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா?

’’மோடி தான் இந்தியாவின் விந்து, விதை’’, ’’மத்திய அரசுடன் இணக்கமாகப் போவதே தமிழகத்திற்கு நல்லது’’ என்றெல்லாம் இன்று பேசி திரியும் ராஜேந்திர பாலாஜி இதையே ஜெயலலிதா இருக்கும் போது பேசியிருந்தால் அவரது கதி என்னாவாயிருக்கும்? இவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாரே எடப்பாடி என்பதுதான் கவலை.