நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன ஜெயகுமார் எம்.பி.யின் மகன் ஜெயவர்தன், அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயராக போட்டியிடும் ஆர்வத்தில் இருந்தார்.
ஜெயக்குமார் மகனுக்கு ஆப்பு வைத்த மதுசூதனன்! உள்ளாட்சிக்கு வேட்டு வைத்த வைத்தியலிங்கம்!
அந்த ஆசைக்கு வேரிலேயே வெந்நீர் ஊற்றியிருக்கிறார் மதுசூதனன். நேற்று அ.தி.மு.க. அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம் எல் ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆரம்பம் முதலே கடுகடுவென இருந்தவர் அவைத்தலைவர் மதுசூதனன்தான். அவர் சட்டென்று மேட்டரைத் தொடங்கி வைத்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முழு வெற்றி பெற வேண்டுமானால் ஒரு முக்கியமான கட்டுப்பாட்டை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குடும்ப அரசியலை உள்ளாட்சித் தேர்தலுக்கு கொண்டு வரக்கூடாது.
வாரிசுகளை இந்த தேர்தலில் களமிறக்கவேண்டும் என்று யாரும் ஆசைப்படக் கூடாது என்று ஆரம்பத்திலேயே அதிரடி கொடுத்தார். இது ஜெயகுமாருக்கும் பன்னீருக்கும் வைக்கப்பட்ட செக் என்கிறார்கள்.
அதேபோன்று, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியபோது உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட்டார். அதாவது, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு ஏகப்பட்ட சவால் இருக்கிறது. இட ஒதுக்கீடு, கூட்டணிக் கட்சிகள், உட்கட்சி மோதல் போன்ற பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால், உள்ளாட்சித் தேர்தலை எப்பாடுபட்டாவது சட்டமன்ற தேர்தல் வரைக்கும் ஒத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் சட்டமன்றத் தேர்தலுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும் என்று கோரிக்கை வைத்தார்.
மதுசூதனன், வைத்தியலிங்கம் இருவருமே முதல்வர் எடப்பாடியின் ஊதுகுழலாகத்தான் பேசினார்கள் என்பதாலோ என்னவோ, முதல்வர் அவர்கள் பேச்சுக்கு விளக்கம் தரவில்லை. கூட்டணிக் கட்சியினர் நெருக்கத்திற்காக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தார். ஆக, எடப்பாடிக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை.