தாலி கட்டிய மனைவியைக்கூட அகிலேஷ் யாதவால் ஜெயிக்க வைக்க முடியவில்லை என்று, மாயாவதி விமர்சித்துள்ளார்.
மனைவியை கூட ஜெயிக்க வைக்க முடியவில்லை! இளம் தலைவரை விளாசிய மாயாவதி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆகியவை தங்களுக்குள் மட்டும் கூட்டணி வைத்துக் கொண்டன. இந்த கூட்டணி பல தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் முடிவில், இவர்கள் பரிதாப தோல்வியை தழுவினர்.
இந்நிலையில், சமாஜ்வாடி உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாக, மாயாவதி தெரிவித்துள்ளார். இதுபற்றி லக்னோவில் நடைபெற்ற, பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சியால் முஸ்லீம்களின் வாக்குகளை மட்டுமே ஈர்க்க முடிந்தது. அவர்கள் சார்ந்த யாதவ் சமூகத்தினரின் ஓட்டு கூட கிடைக்கவில்லை. அகிலேஷ் யாதவால், தனது மனைவி டிம்பிள் யாதவைக் கூட ஜெயிக்க வைக்க முடியவில்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தது ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமின்றி முடிந்துவிட்டது, என்று குறிப்பிட்டார்.
எனினும், இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்ப்பதாக, சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது. பிரதமர் பதவிக்கு மாயாவதியையும், உத்தரப் பிரதேச முதல்வர் பதவிக்கு அகிலேஷையும் மாறி மாறி ஆதரிப்பதுதான், இவ்விரு கட்சிகளின் கூட்டணி ஒப்பந்தமாகும். மாயாவதியின் பிரதமர் கனவு பறிபோன நிலையில், 2022ல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் முதல்வராக, அவர் ஆதரவு தருவார் என்பது கனவில்கூட நினைக்க முடியாத விசயம் என்பது குறிப்பிடத்தக்கது.