பசி இருக்கும் வரை லீவு கிடையாது

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 35



ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு ஞாயிற்றுக் கிழமை விடுப்பு கொடுப்பது குறித்து அதிகாரிகள் மேயர் சைதை துரைசாமியிடம் ஆலோசனை மேற்கொண்ட நேரத்தில், அதனை மறுத்து ஒளவையாரின் பாடலைக் கூறினார்.
’ஒரு நாள் உணவு இல்லை’ என்று சொன்னால் இந்த வயிறு ஏற்றுக்கொள்ளாது என்று ஒளவையார் கூறியிருப்பது உங்களுக்கும் தெரியும். ஒரே ஒரு நாள் கூட ஏழை மக்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணமும் ஆகும். ஆகவே, அம்மா உணவகத்திற்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை கிடையாது என்று அறிவித்தார் சைதை துரைசாமி.
வாரத்தில் ஏழு நாட்களும் அம்மா உணவகம் செயல்பட வேண்டும். இங்கு வேலை பார்க்கும் பெண்கள், ஆளுக்கு ஒரு நாள் என சுழற்சி முறையில் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மட்டுமின்றி எப்போதும், எந்த காரணத்துக்காகவும் அம்மா உணவகத்திற்கு விடுமுறை இல்லை என்பதை உறுதி படுத்தினார்.
இதையடுத்து மலிவு விலை உணவக மகளிர் குழு பணியாளர்களுக்கு சீருடை வழங்குவதற்கான வடிவமைப்பிலும் மேயர் சைதை துரைசாமி கவனம் செலுத்தினார். அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை மட்டுமின்றி உணவு பட்டு சீருடை பாழாகிவிடக் கூடாது என்பதால் மேலங்கிகள் வழங்கவும் ஆலோசனை கூறினார்.
சாப்பிடும் நபர்கள் கை கழுவும் இடம், சாப்பிட்ட பிளேட் கழுவும் இடம் போன்றவையும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக அம்மா உணவகம் தனியார் ஹோட்டல் போன்று சாப்பிடுவதற்கு நல்ல சூழல் தர வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார்.
மலிவு விலையில் உணவு கிடைக்கிறது என்ற தகவல் தெரிந்ததும் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தட்டு மக்களும் அம்மா உணவகம் நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். மலிவு விலை உணவகத்தின் மாபெரும் வெற்றிச் செய்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது. அந்த நேரத்தில் மற்றொரு மகத்தான காரியம் ஒன்றையும் செய்து, முதல்வர் மனதில் அழியாத இடம் பிடித்தார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.