கிடுகிடுவென உயரும் வெங்காயம் விலை! விரைவில் கிலோ ரூ.100! திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன?

சென்னை: வெங்காயம் விலை இன்னும் சில நாட்களில் கிலோவுக்கு ரூ.100 தொடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய மக்களின் சமையலில் வெங்காயத்திற்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக,  பெரிய வெங்காயம் ஏழை எளிய, நடுத்தர மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தக்கூடியதாகும். இவ்வகை வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில்தான் விளைவிக்கப்படுகிறது. அங்கிருந்தே நாட்டின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

சமீப நாட்களாக, அந்த மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடுமையாக இருந்ததால், வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விளைச்சலும் பாதிக்கப்பட்டு, டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காய வரத்து குறைந்துவிட்டது.  

இதையடுத்து, பெரிய வெங்காயம் விலை திடீரென கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. மொத்த விற்பனை கடைகளில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை சென்ற வாரம் சராசரியாக ரூ.50 முதல் ரூ.60 வரை காணப்பட்டது.

தற்போது இதுவே நாடு முழுவதும் ரூ.70 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில், பெரிய வெங்காயம் விலை ரூ.100 தொடக்கூடும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இந்த விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிப்பதாக உள்ளது.