பன்னீரின் இரண்டாவது வாரிசும் களம் இறங்கியாச்சு! பூங்குன்றன் காட்டிய வழியில் ஜெ. சமாதியில் ஜெயபிரதீப்!

பூங்குன்றன் சங்கரலிங்கம் ஒருகாலத்தில் ஒபிஎஸ், எடப்பாடியை எல்லாம் விட அதிகாரம் மிக்கவராக வலம் வந்தவர்.


ஜெயலலிதாவின் கண்கள்,காதுகள் எல்லாமே பூங்குன்றனே என்றிருந்த காலம் போய் இப்போது பூங்குன்றன் தீவிர ஆன்மீகவாதியாக ஆகிவிட்டார்.அவர் முகநூலில் ஜெ.பூங்குன்றன் சங்கரலிங்கம் என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கார்.அதில் அவ்வப்போது ' உங்கள் காலத்து தலைமை நிலையம் போல இன்று இல்லையே' என்பது போல புலம்பலான போஸ்ட் போடுவதோடு சரி.

சமீபத்தில்,ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற பூங்குன்றனுக்கு ஒரு விசயம் கண்ணில் பட்டிருக்கிறது.ஜெயலலிதா சமாதியில் இருந்து,200 அடி தூரத்தில் இருக்கும் கலைஞர் நினைவிடத்தில் தினம்,தினம் வண்டி,வண்டியாக பூக்களைக் கொட்டி அலங்கரிக்கிறார்கள்.

ஆனால்,ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அப்படி இல்லையே என்பதைக் கவனித்த பூங்குன்றன் அலங்காரமில்லாத ஜெயலலிதா நினைவிடத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு,இது குறித்து வருத்தம் தெரிவித்து போஸ்ட் போட்டிருக்கிறார்.மறுநாள் தானே கொஞ்சம் பூ வாங்கிக் கொண்டு போன பூங்குன்றனுக்கு ஆனந்த அதிர்ச்சி!.

ஜெயலலிதாவின் நினைவிடம் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப் பட்டது.இதை யார் செய்தார்கள் என்று பூங்குன்றனோடு சேர்ந்து அதிமுகவின் தொண்டர்களும் அதிசயமாக பார்க்க,சத்தமில்லாமல் இந்த காரியத்தை செய்தது ஒபிஎஸ்ஸின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் என்கிற விசயம் மெதுவாக கசியவிடப்பட்டது.

இத்தனை காலமாக எடப்பாடியார் ஆட்சியில், அவர் உத்தரவில்லாததால்தான் ஜெயலலிதா நினைவிடம் கவனிப்பார் இல்லாமல் கிடந்தது போலவும் அவர் வெளிநாடு போனதும் கட்ட்சியின் தலைமையகம் கூட அல்ல துணை முதல்வர் ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப் இந்த காரியத்தை முன்னெடுத்திருக்கிறார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டார் ஒபிஎஸ்!

இதைப் புரிந்து கொண்ட பூங்குன்றன் அந்த மலர் அலங்காரத்தை படமெடுத்து போட்டு,இதைச்செய்த முதல்வர்,துணை முதல்வர் மற்றும்,கழக நிர்வாகிகளுக்கு நன்றி என்று நிலைத்தகவல் வெளியிட்டு இருக்கிறார். எப்படிலாம் யோசிக்கறாங்கப்பா.