விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்தும் தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.
காவல் நிலையத்தில் லாரி ஓட்டுனர் கன்னத்தில் ஓங்கி அறை! ஆய்வாளரின் அத்துமீறல் வீடியோ வைரல்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_6390_1_medium_thumb.jpg)
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வேலூரைச் சேர்ந்தவர் தியாகராஜன், இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தங்கையின் சொந்தத்தின் மூலம் தச்சூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்
தியாகராஜன். கடனை பெற்ற சுப்பிரமணி ஓராண்டாகியும் கடனை திருப்பி செலுத்தாத நிலையில் தியாகராஜன் அவரிடமிருந்து கடன் தொகையை எப்படியாவது திரும்ப பெற்று விட வேண்டும் என எண்ணி ஒரு நாடகம் போட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தியாகராஜன், சுப்பிரமணியிடம் யாரோ ஒருவர் பேசுவது போல் பேசி வைக்கோல் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி வைக்கோல் லோடு தருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி வாடகை லாரி மூலம் வைக்கோல் ஏற்றி தியாகராஜன் சொன்ன இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
வைகோல் லோடு வந்ததும் அதை லாரியுடன் பிடித்து வைத்துக் கொண்டு லாரி ஓட்டுநர் மணிகண்டனிடம் தியாகராஜன் உன் முதலாளியிடமிருந்து எனக்கு பணம் வர வேண்டி உள்ளது. அதை திருப்பிக் கொடுத்துவிட்டு லாரியை எடுத்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ந்துபோன லாரி ஓட்டுனர் மணிகண்டன் பதறியடித்துக்கொண்டு சுப்பிரமணிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணி மணிகண்டனை காவல்துறையில் புகார் கொடுக்கும் படி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தியாகராஜன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து தியாகராஜன் மற்றும் மணிகண்டனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்தபோது மணிகண்டன் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் வரமுடியவில்லை.
மூன்று நாட்கள் கழித்து காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் விசாரணைக்கு வரும்படி அழைத்தாள் வர முடியாதா என மணிகண்டனை தகாத வார்த்தையால் பேசியும் கன்னத்தில் அறைந்துள்ளார். அச்செயலை தனது செல்போனில் பதிவு செய்த மணிகண்டனின் நண்பர் ஒருவர் உடனே வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் அந்த வீடியோவை பரப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து காவல் நிலையம் வந்த தியாகராஜன் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரிடம் விசாரணை நடத்திய போலீசார் சுப்பிரமணியிடம் இருந்து தியாகராஜனுக்கு வர வேண்டிய பணத்தை சுப்பிரமணியத்திடம் இருந்து தியாகராஜனுக்கு வாங்கிக் கொடுத்தனர்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் தான் செய்த தவறுக்கு தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாக மணிகண்டன் ஒரு புதிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.