வேலூர் மாவட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என தண்டிக்கப்பட்ட மாணவிக்கு பண உதவி செய்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா பாராட்டுகளை பெற்று வருகிறார்.
9 ஆயிரம் ரூபாய் தான் இருக்கு மேம்! கெஞ்சிய மாணவி! அடித்து வெளியே விரட்டிய ஆசிரியை! வேலூர் பரிதாபம்!
வாணியம்பாடியை அருகே ஆட்டோ ஓட்டுநர் முரளி தன்னுடைய மகள் காயத்திரியை செட்டியப்பனூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கிறார். 10-ம் வகுப்பு படிக்கும் காயத்ரி கல்விக் கட்டணமாக 45 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டிய சூழ்நிலையில் அவரது தந்தை 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே தற்போது செலுத்தியதாக கூறப்படுகிறது.
மீதித் தொகையை செலுத்த பள்ளி நிர்வாகத்திடம் அவகாசம் கேட்டுள்ளார் மாணவி. ஆனால் அதை எற்க மறுத்த பள்ளி நிர்வாகம் மாணவியை வகுப்பிற்குள் அனுமதிக்காமல் சுட்டெரிக்கும் வெயிலில் பள்ளி வளாகத்தில் நிற்க வைத்துள்ளது. வெயிலில் நீண்ட நேரம் நின்ற மாணவி மயங்கி விழுந்தார்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்துள்ளனர். இது குறித்து கேள்விபட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி காயத்திரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் கல்வி உதவித் தொகையாக 30 ஆயிரம் ரூபாயைக் மாணவிக்கு வழங்கினார். இதையடுத்து மாணவியும், அவரது குடும்பத்தாரும் அஸ்லம் பாஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அஸ்லம் பாஷா பேசும்போது கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவியை வெயிலில் நிற்க வைத்தது மனித உரிமை மீறல். காமராஜர் படிக்காத மேதையாக இருந்தாலும் நிறைய பள்ளிகளை திறந்து வைத்தார். ஆனால் தற்போதைய அரசு தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி கொடுத்து வருவதாகவும், அதனால்தான் அரசுப் பள்ளிகள் இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாணவியை வெயிலில் நிற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை ஏற்கவேண்டும் என்றும் அவர் 12ம வகுப்பு வரை ஆகும் செலவை பள்ளி நிர்வாகமே எற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் அஸ்லம் பாஷா.