திரிபுரா முதல்வர் பிப்லல் குமார் டெப் ஒரு திரிபுரா பல்கலைக்கழக பட்டதாரி.ஆனால்,பிஜேபியின் பாரம்பரியப்படி நம்ம செல்லூர் ராஜுவை எல்லாம் அசால்ட்டாக தூக்கி அடிக்கும் அறிவியல் கருத்துகளை அடிக்கடி உதிர்ப்பவர்.
வாஸ்து பலன் தெரியும்! வாத்து பலன் தெரியுமா? சொல்கிறார் திரிபுரா பாஜக முதல்வர்!
தொடர்ந்து ஐந்துவருடம் இந்திய பெண்களுக்கு மிஸ் இண்டியா,மிஸ் வோர்ல்ட் பட்டம் கொடுத்தது அவங்க அழகுக்கல்ல,அது ஒரு மார்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜி என்று கண்டுபிடித்துச் சொன்னது அவர்தான். ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் போன்ற 'சிவில் ' சர்வீஸ் தேர்வுகள் எழுத சிவில் எஞ்சினியர்களை மட்டும்தான் அனுமதிக்க வேண்டும் என்றவர்.
இதையெல்லாம் தாண்டி , மஹாபாரத காலத்திலேயே இந்தியர்கள் சாட்டிலைட்களை பறக்க விட்டிருந்தார்கள்,இண்டர் நெட் பயன்படுத்தினார்கள் என்று சொல்லி பிஜேபி தலைவர்களையே மிரள வைத்தவர்.அதற்குப்பிறகு அவரை கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி மேலிடம் சொல்லி விட்டதால் கொஞ்ச நாள் வாய்திறவாமல் இருந்தார்.
சமீபத்தில் குருசாகர் என்கிற செயற்கை ஏரியை நாட்டுக்கு அர்பனிக்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவருக்குள் இருக்கும் விஞ்ஞானி மீண்டும் விழித்துக்கொண்டான்.ஏரியில் நிறைய வாத்துக்களைப் பார்த்ததும் அவர் ஒரு புதிய அறிவயல் தத்துவம் ஒன்றை சொல்லி இருக்கிறார். ஏரியில் நிறைய வாத்துகள் நீந்துவதால் தண்ணீரில் ஆக்சிஜன் லெவல் அதிகரிக்கும்.
அதோடு,வாத்துகளின் எச்சம் மீன்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று சொல்லித்,தான் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதை உணர்த்தினார். அதோடு,ஏரியில் மீன்வளர்ச்சியை விரைவுபடுத்தவும் , கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதன்படி,ருத்திரசாகர் எரிக்கரையில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகள் வழங்கப் போவதாகவும் சொல்லி கைதட்டலை அள்ளினார்.