விடுதலைப்புலிகள் கேட்டுக்கொண்டதாலே தி.மு.க.வுடனும் காங்கிரஸுடன் கூட்டு வைத்தோம் என்று திருமாவளவன் சொன்னதை புலம் பெயர்ந்த தமிழர்கள் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.
லண்டனில் திருமாவளவன் பொய் சொன்னாரா? கடும் சர்ச்சை!
அதனால் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள்.காங்கிரசுடன் கூட்டுவைக்கைச் சொல்லியிருக்கவே மாட்டார் பிரபாகரன். புலிகள் சார்பாக சேரலாதன் பேசியதாகச் சொல்வதெல்லாம் பொய். இதெல்லாம் திருமாவளவன் தனது அரசியல் தேவைகளுக்காக விடுகின்ற கதைகள்.
இப்பொழுது காங்கிரசுடன் கூட்டு வைத்ததை அவர் பிரபாகரனையும் புலிகளையும் வைத்து நியாயப்படுத்த முற்படுகிறார் என்பதாக உள்ளது. திருமாவளவன் சொன்னதைப் பற்றி கருத்துச் சொல்வதற்கு இன்று பிரபாகரனும் இல்லை. நடேசனுமில்லை. சேரலாதனுமில்லை. ஆனாலும் வரலாறு உண்டு. அது உண்மைகளைச்சொல்லும். உண்மைகளை நிரூபிக்கும்.
புலிகளுக்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களோடும் கட்சிகளோடும் தொடர்பும் உறவும் இருந்தது. அதைப்போல ஈழ உணர்வாளர்கள் என்று கூறப்படும் பலரோடும் தொடர்புகளிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒரே விதமான அரசியல் நிலைப்பாட்டையும் அணுகுமுறைகளையும் கொண்டவர்களில்லை.
ஒரே விதமான அடையாளத்திற்குரியவர்களுமில்லை. ஆனாலும் அனைவரோடும் புலிகள் உறவைக் கொண்டிருந்தனர் என்றால், அது ஈழப்போராட்டத்துக்கான, தமக்கான ஆதரவைப் பெறுவதை மட்டுமே நோக்காகக் கொண்டது. இதனால் இவர்களுக்கிடையிலான முரண்பாடுகள், வேறுபாடுகளைப் பற்றியோ இவர்களுடைய அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றியோ புலிகள் எத்தகைய விமர்சனங்களையும் முன்வைத்ததுமில்லை.
அபிப்பிராயங்களைச் சொன்னதுமில்லை. எனவேதான் வை.கோவுடனும் உறவு. சீமானுடனும் உறவு. திருமாவளவனோடும் உறவு. கொளத்தூர் மணி, தா.பாண்டியன், பழ.நெடுமாறன் போன்றோருடனும் உறவு என எல்லாத் தரப்புகளோடும் உறவைக் கொண்டிருந்தனர். எல்லோரையும் அவரவர் அரசியலின் வழிகளுக்கூடாகவும் அவரவர் ஆற்றலுக்கூடாகவும் பயன்படுத்த முற்பட்டனர். இதுவே புலிகளுடைய உத்தி, உபாயம், இயல்பு.
திருமாவளவன் குறிப்பிடுகின்ற காலப்பகுதியில் (2008, 2009) காங்கிரஸையும் பாரதீய ஜனதாக்கட்சியையும் தமக்கிசைவாக்குவதற்குப் புலிகள் முற்பட்டனர். யுத்த நெருக்கடியைத் தணிப்பதற்கான உபாயமாக இந்த இரண்டு தரப்பையும் புலிகள் நெருங்கியிருந்தனர். அப்பொழுது ஆட்சியிலிருந்தது காங்கிரஸ். ஆட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது அல்லது அவ்வாறு புலிகளினால் நம்பப்பட்டது பாரதீய ஜனதாக்கட்சி. ஆகவே இரண்டு தரப்பையும் தனித்தனியாகக் கையாள்வது அவசியம் என்ற அடிப்படையில் செயற்பட்டனர் புலிகள்.
ஆனால் அது எதிர்பார்த்த சாத்தியங்களையோ வெற்றியையோ கொடுக்கவில்லை. இதில் ஒரு வழியைப் பற்றியும் அந்த வழியில் நடந்தவற்றில் தனக்குத் தெரிந்ததைப்பற்றியுமே திருமாவளவன் கூறியிருக்கிறார். இதே காலப்பகுதியில் நடந்த விசயங்களைப்பற்றி வை.கோவிடம் வேறு கதைகளிருக்கும். பழ.நெடுமாறனிடம் வேறு தகவல்களிருக்கும். கொளத்தூர் மணி வேறு விதமான சங்கதிகளைச் சொல்லக்கூடும்.
புலிகளுடைய அரசியல் உபாயம் என்பது எப்போதும் தம்மை நெருக்கடிகளிலிருந்து விடுவித்துக் கொள்வதும் தமது வெற்றிக்கான வழிகளை இலகுவாக்கிக் கொள்வதுமாகவே இருந்தது. இதனால் அவர்களுக்கு எது சாத்தியப்படுகிறதோ அதையிட்டே சிந்தித்தனர். எது இலுகுவானதாக இருந்ததோ அதைக் கையாண்டனர்.
எளிய உதாரணங்கள் சில. ஒன்று, 1989, 90 இல் இந்தியப்படையை வெளியேற்றுவதற்காக பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்தமை. புலிகள் – இலங்கை அரசுக்கிடையிலான பேச்சுவார்த்தை என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாட்டினால் இந்தியப்படையை வெளியேற்றித் தம்மைச் சூழ்ந்திருந்த நெருக்கடியை முறியடித்தார் பிரபாகரன். பின்னர் பிரேமதாசவுடன் இலங்கை அரசுடன் போரைத் தொடங்கினார்.
இரண்டாவது, புலிகளைத் தடை செய்திருந்த அமெரிக்காவைக் கையாளும் உத்தியாக ஒபாமாவுக்கான ஆதரவு இயக்கத்தை ஆரம்பித்தமை. அன்றைய சூழலில் ஒபாமா தேர்தலில் வெற்றியடைவார். அவர் கறுப்பினப் பின்னணியைக் கொண்டவர் என்பதால் ஈழப்போராட்டத்துக்கு குறைந்த பட்ச ஆதரவை வழங்குவார்.
இதன் மூலம் இலங்கை அரசினால் தமக்கேற்படுத்தப்பட நெருக்கடியை கடக்க முடியும் என புலிகளால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியான எந்தச் சாத்தியங்களுமில்லை என்பதும் அப்படி எந்தவகையான வெற்றியளிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்பதும் வரலாறு. இருந்தாலும் இவ்வாறான அணுகுமுறையில் புலிகள் சிந்தித்தனர், செயற்பட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இவ்வாறே 2009 இல் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தொடர்பான அணுகுமுறையிலும் புலிகள் தொடர்பான நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும் என புலிகளால் நம்பப்பட்டது. இதை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த பா.நடேசன் அப்போது சில தனிப்பட்ட உரையாடல்களிலும் உள்மட்டத்தில் போராளிகளிடத்திலும் கூறியிருக்கிறார்.
அப்பொழுது வன்னியில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் பத்திரிகையின் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்களிலும் கூட இந்த எதிர்பார்ப்பின்தொனி இருந்ததைக்காண முடியும். புலிகளின் வானொலியான புலிகளின் குரலின் செய்தி மற்றும் செய்திக் கண்ணோட்டம் போன்றவற்றிலும் இது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நிலைமைகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
இதையெல்லாம் இங்கே சுட்டுவது ஏனெனில், யாருடைய கணிப்பீடுகளுக்குள்ளும் புலிகள் ஒரு போதுமே கட்டுப்பட்டிருப்பதில்லை என்பதற்காகவே. அவர்கள் புரிந்து கொள்ளவே முடியாத புதிராக எப்போதுமிருந்தனர். அதுதான் புலிகளின் வெற்றியும் தோல்வியுமாகும்.
இதைப் புலிகளின் ஆதரவாளர்களிற் பலரும் இன்னும் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் புலிகளைக் குறித்த தகவல்களையும் விமர்சனங்களையும் யாரும் முன்வைக்கும்போது பதற வேண்டியேற்படுகிறது. புலிகளைப் பற்றிய உண்மைகளை ஏற்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
இதெல்லாம் எதனால் ஏற்படுகின்றன?
உண்மை சுடும் அல்லவா. அதனால்தான் பலரும் அதை நெருங்காமல், அதற்கு வெகு தொலைவிலிருக்கிறார்கள். உண்மை கசக்குமல்லவா. அதனால்தான், அதை விரும்பாமல் தவிர்க்கிறார்கள். வரலாறு முழுவதும் இதுவே நடைமுறையாக உள்ளது. என்பதால்தான் உண்மைக்காக புரூனோ உயிரோடு எரிக்கப்பட்டார்.
சோக்ரட்டீஸ் நஞ்சூட்டப்பட்டார். கிறிஸ்து சிலுவையிறையப்பட்டார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் உண்மைச் சொன்னதற்காக காலந்தோறும் விலக்கப்பட்டனர். தண்டிக்கப்பட்டனர். நிந்தினைக்குள்ளாகினர். பொய்யோ எப்போதும் ருஸி மிக்கதாக இருக்கிறது. அதனுடைய அலங்காரம் அதற்குக் கவர்ச்சியைக் கொடுக்கிறது.
உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்னும் இதுதான் நிலை. திருமாவளவன் தானறிந்த விசயங்களைச் சொல்ல விழைந்திருக்கிறார். அவருக்கும் புலிகளுக்குமிடையிலான உறவில் நடந்த சில தகவல்களைச் சொல்ல முற்பட்டுள்ளார். வரலாற்றுச் சந்தர்ப்பங்களில் நாம் சிலவற்றைப் பேசியே ஆக வேண்டும். அது வரலாற்றை முன்னகர்த்துவதற்கு அவசியமானது.
ஆனால், இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லைச் சிலரால். இதற்கு வரலாறு என்ன செய்ய முடியும்? புலிகளுக்கும் தொல் திருமாவளவனுக்குமிடையிலான உறவின் அடிப்படையில் 2002 முதற்தடவை புலிகளிடம் ஈழத்திற்கு வந்திருந்தார் திருமாவளவன். 2002 இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் என்ற நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த திருமாவளன் வன்னியில் பிரபாகரனைச் சந்தித்தார்.
அவருடன் அந்தப் பயணத்தில் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி, ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப் ஆகியோரும் வந்திருந்தனர். இதற்குப்பிறகும் இரண்டு தடவைகள் வன்னிக்கு வந்து புலிகளைச் சந்தித்திருக்கிறார் திருமாவளன். ஒரு தடவை அவர் வந்திருந்தபோது வன்னியில் உருவாக்கப்படவிருந்த ஊடகக் கல்லூரிக்கான அடிக்கல்லினை நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரோடு மறைந்த தராகி டி சிவராமும் கலந்து கொண்டிருந்தார்.
இதில் மானுடத்தின் தமிழ்க்கூடலில் பங்குபற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து அழைத்து வந்தவர் வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சரான பொ. ஐங்கரநேசன். பிந்திய வருகைகளுக்குக் காரணமாக இருந்தவர் புலிகளின் நிதர்சனம் நிறுவனம் என்ற தொலைக்காட்சி மற்றும் திரைப்பட உருவாக்கங்களுக்குப் பொறுப்பாக இருந்த சேரலாதன்.
சேரலாதன் தொடர்ச்சியான தொடர்புகளை தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளோடு கொண்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே அவர் இறுதிப்போர்க்காலத்தில் திருமாவளவனோடு உரிமையோடு பேசியதும் கோரிக்கையை வைத்ததும். போர் முடிந்த பிறகு இலங்கைக்கு வருகை தந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளைப் பார்வையிட்ட இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் திருமாவளவனும் இருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர் கூடத்திலும் ஒரு கூட்டம் நடைபெற்றது.
ஊடகத்துறை சார்ந்து அதில் கலந்து கொண்டிருந்த என்னைக் கண்டதும் திருமாவளவன் எழுந்து வந்து கேட்ட முதற்கேள்வி “சேராவுக்கெல்லாம் (சேரலாதன்) என்னாச்சு? அவங்களெல்லாம் இருக்கிறாங்களா? அண்ணன் (பிரபாகரன்) என்ன ஆனார்?” என்பதாகவே இருந்தது.
அந்தளவுக்கு உணர்வும் உறவும் நெருக்கமும் கொண்டிருந்தவர் திருமாவளவன். புலிகளையும் ஈழப்போராட்டத்தையும் ஆதரித்ததற்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த பலர் பல்வேறு விதமான அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சிலருடைய பாஸ்போட் கூட முடக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு உதவினார்கள் என்ற பேரில் பல தோழர்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் மிக வறிய பின்தங்கிய நிலையிலிருந்து கொண்டே ஈழ ஆதரவுப் போராட்டத்துக்குத் தொடர்சியாக உதவி வந்திருக்கின்றனர்.
இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமலே திருமாவளவன் மீதான எதிர்ப்புணர்வைப் பலரும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இது வருத்தத்திற்குரியது. கண்டிக்கப்பட வேணடியது. திருமாவளவன் எங்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கான தலைவரோ கட்சிப் பிரதிநிதியோ அல்ல.
அவர் இந்தியச் சூழலில், தமிழ் நாட்டில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்கும் தலைவர். அதை அவர் செய்து கொண்டே ஈழத்தமிழருடைய அரசியல் போராட்டத்துக்கும் அரசியல் கோரிக்கைக்கும் ஆதரவளிக்கிறார். இதற்காக அவரும் அவருடைய கட்சியினரும் கொடுக்கின்ற விலை அதிகம். நெருக்கடிகள் நிறைய.
திருமாவளவின் அரசியல் நிலைப்பாடுகள், ஈழ அரசியல், இலங்கை அரசியல் குறித்த புரிதல்களில் குறைபாடுகளும் தவறுகளுமிருக்கலாம். அதை எதிர்கொள்ளும் முறையும் அணுகும் முறையும் வேறு. அவர் மீதான விமர்சனங்களை வைக்கும் தன்மையும் வேறு. அவரோ அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்களொ ஒரு போதுமே ஈழத்தமிழர்களுக்கு எதிராக எத்தகைய வன்முறை சார் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியவர்களில்லை.
அப்படியிருக்கும்பொழுது எதற்காக இத்தனை கீழான வழிமுறையில் திருமாவை எதிர்க்க வேண்டும்? இதேவேளை திருமாவின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் சாதியத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் நமக்கு வேண்டியவையாகும். ஈழப்போராட்டம் படிப்பினைகளைக் கூடக் கொடுக்கவில்லை என்பதுதான் ஆகப் பெரிய துயரம்.