யாகம் நடத்தும் செலவில் தண்ணீர் கொடுக்கலாம்! அதிமுகவிற்கு திருமா அறிவுரை!

நாகை மாவட்டம் சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:  தமிழக அரசு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு போதிய முயற்சிகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் வீடுகளுக்கு தண்ணீர் லாரி லாரியாக எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டு வரு்கிறது. சாதாரண மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. மத்திய அரசும் தமிழக மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு யாகம் செய்ய  செலவழிக்கும் தொகையை குடிநீருக்காக பயன்படுத்தலாம். 

தண்ணீர் தருவதற்கு கேரளா தயாராக இருந்தாலும் கூட அதைப் பெறுவதற்கு ஏன் தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது? என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ரயில் மூலம் குடிநீர் வழங்க முன் வந்திருக்கிறார். ஆனால் தேவைப்பட்டால் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்று சொல்லுவது வறட்டு கவுரவம். இதன் மூலம் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று சொல்ல வருகிறார்களா? அல்லது கேரளாவிடம் தண்ணீர் வாங்க வெட்கப் படுகிறார்களா? ஆந்திராவில் இருந்து நமக்கு கிருஷ்ணாநதி மூலம் வரவேண்டிய தண்ணீரும் வந்து சேரவில்லை. 

காவிரியில் கர்நாடகம், கிருஷ்ணாவின் ஆந்திராவும் நமக்குத் தர வேண்டிய தண்ணீரை தந்தாலே பல மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு தீரும் அளவுக்கு அதை வைத்து சமாளிக்க இயலும். அதைக் கேட்டு பெற வேண்டிய முயற்சியில் தமிழக அரசு ஈடுபடாமல் யாகம் நடத்த முயற்சியில் ஈடுபடுவது உள்ளபடியே வேதனைக்குரியது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.