சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்யும் நடைமுறையானது கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கொரோனாவால் அவஸ்தை படும் நேரத்தில், பெட்ரோல் விலையை ஏற்றத்தான் வேண்டுமா..?
இதற்கிடையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வெகுவாக குறைந்தபோதும், கடந்த மாதம் 6ம் தேதி பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 13 ரூபாயும் உயர்த்தியது, மத்திய அரசு. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தும் அதன் பயன் பயனாளிகளை போய்ச் சேரவில்லை.
கடந்த 80 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினசரி விலை நிர்ணய முறையை எண்ணை நிறுவனங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கின. முதல் நாளே பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 60 காசு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது.
கொரோனாவால் ஏற்பட்ட நிதிநெருக்கடியை சமாளிக்க, வருவாயை அதிகரிக்க பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியது. எண்ணை நிறுவனங்களோ அவற்றின் வருவாய் இழப்பை சரிகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிசயமாக பா.ஜ.க.வின் ஊதுகுழலாக இருக்கும் கோபால்ஜிகூட, பெட்ரோல் விலை ஏற்றத்தைக் கண்டித்து பதிவு எழுதியிருப்பதுதான் அதிசயம். கொரோனாவால் நிதி நெருக்கடி என்பது அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும்தான். அவர்களும் வேலை இழந்து, கடந்த 80 நாட்களாக வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியையும் விலையையும் உயர்த்துவது என்பது ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிடும்.
கொரோனா ஊரடங்கால் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் நெருக்கடிகளை காரணம் காட்டி சரக்கு வாகனங்கள் அதன் வாடகைகளை உயர்த்தியதால், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் பெரும் நிதிச்சுமையை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் டீசல் விலையை உயர்த்துவது என்பது விவசாயிகளையும் சேர்த்து பாதிக்கும்.
ஏழை எளியவர்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வரி உயர்வை, கொரோனா பாதிப்பில் இருந்து இந்த தேசம் முற்றிலுமாக மீண்டு வரும் வரையிலாவது தள்ளிவைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பு. மத்திய அரசும், எண்ணை நிறுவனங்களும் பரிசீலிக்க வேண்டும்.
உண்மையில், இந்த நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமே தவிர கூட்டக்கூடாது. பொதுமக்களுக்கு 20 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்திருக்கும் மோடி, பெட்ரோலில் சிறு விலைக்குறைப்பு செய்தால் குறைந்தா போய்விடுவார்..?