அதானிக்கு மட்டும் எதுக்கு காசு அள்ளித்தர்றீங்க? தமிழக அரசுக்கு நீதிமன்றம் சூடு!

கார்ப்பரேட்களை நம்பித்தான் இன்றைய அரசுகள் இயங்கிவருகின்றன. குறைந்த விலைக்கு மற்றவர்கள் மின்சாரம் தரும்போது, அதிகவிலைக்கு தரும் அதானியிடம் ஒப்பந்தம் போட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.


தமிழகத்தில் அனல், அணு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தேவைக்காக சில தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கிடையே 2018ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், ஒரு மெகாவாட்டுக்கு குறைவாகக் காற்றாலை மூலமாக மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்தவும், விநியோகம் செய்யவும் கூடாது என்று தெரிவித்திருந்தது.

இதை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த தமிழ்நாடு நூற்பு ஆலைகள் சங்கம் , கோவையில் உள்ள தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் உட்படத் தனியார் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மீண்டும் அந்த நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ”ஏழை மக்களின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சுந்தரேசன் மற்றும் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, ”மனுதாரர்களிடம் இருந்து ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம் ரூ.2க்கு மட்டுமே வாங்கப்படுகிறது. ஆனால் அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7க்கு வாங்க 21 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறது’’ என்று வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுதாரர்கள் கூறுவதை ஏற்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டு தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறதா? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தனியார் நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது?

தமிழகத்தின் மின்சாரம் கொள்முதல் தொடர்பாக என்னென்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன? அதானி நிறுவனத்திடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டதா? மனுதாரர்களிடம் ரூ.2க்கு மட்டும் மின்சாரம் வாங்குவது உண்மைதானா? அப்படியானால் அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் போது அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், டான்ஜெட்கோ வரும் செப்டம்பர் 26ம் தேதி விரிவாகப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். தமிழக அரசுக்குத்தான் பதில் சொல்லத் தெரியாதே... தள்ளிப்போட்டே காலத்தை ஓட்டிருவாங்க.