அதிவேகமாக நேருக்கு நேராக வந்த கார்கள்! கண் அசந்த ஒரு டிரைவர்! 4 பேர் உயிரை பறித்த கோர விபத்து!

தருமபுரி அருகே அதிவேகமாக சென்ற கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் அரசுப் பள்ளி ஆசிரியையான தனது மனைவி லதா, மகன் நீதிஅபினவ், மகள்கள் அபிநயா மற்றும் வேத ரித்திரிகா ஆகியோர் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அதே சமயம் தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் நோக்கி 5 பேருடன் ஒரு கார் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அந்த கார் இண்டூர் அடுத்த மல்லாபுரம் அருகே வரும்போது எதிரே திருமூர்த்தி ஓட்டிவந்த கார் மீது மின்னல் வேகத்தில் மோதியது.

இதில் இரண்டு கார்களும் ஒன்றொடொன்று மோதியதில் நொறுங்கிவிட்டன. இந்த பயங்கரமான விபத்தில் ஆசிரியை லதா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் சிகிச்சை பலனிக்காமல் லதாவின் கணவர் திருமூர்த்தி மற்றும் மகன் நீதிஅபினவ் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் அதிவேகமாக வந்த காரில் பயணித்தவர்கள் உள்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரும் உயிரிழந்தார். 

விபத்து சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் சென்ற கார் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் அரசாங்கம் எவ்வளவு சட்டங்கள், அபராதங்கள் போட்டாலும் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் தன்னுடைய உயிரை மனதில் வைத்துக்கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என தெரிவித்தனர். டிரைவர் ஒருவர் திடீரென கண் அயர்ந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர்.