ஒப்பீடுக்குக் கொதிக்கும் நாம் தமிழர்கள்
2006 விஜயகாந்த்… 2024 சீமான்.
தமிழக அரசியலில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். அவர் 2005ம் ஆண்டு மதுரையில் தே.மு.தி.க. கட்சியைத் தொடங்கினார். ஊழலை ஒழிக்கக் களத்துக்கு வந்த புரட்சி நாயகனாகத்தான் அப்போது விஜயகாந்த் பார்க்கப்பட்டார். அரசியல் வருகைக்குப் பிறகு தன்னை எம்.ஜி.ஆரின் வழித்தோன்றலாக காட்டிக்கொள்ள முனைந்தார்.
2006 சட்டமன்றத் தேர்தல். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 232 தொகுதியில் தனித்துப் போட்டியிட்டது தே.மு.தி.க.கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்துப் போட்டியிட்ட மற்ற யாரும் மக்கள் மத்தியில் மிகப்பெரும் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால், 8.45 சதவிகித வாக்குகள் பெற்று இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் அதுவரை வட மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருந்த பா.ம.கவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தே.மு.தி.க.
தற்போது அதே போன்று ஒரு சாதனையை சீமான் செய்திருக்கிறார். இதை தாண்டி கட்சி வளர்வதற்கு வாய்ப்பே இல்லை, விஜயகாந்த் பாணியில் சீமானும் இந்த வாக்கு சதவிகிதத்தைத் தாண்ட வேண்டும் என்றால் கூட்டணி வைக்கத்தான் வேண்டும் என்று பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.
இந்த விஷயத்தை நாம் தமிழர்கள் கட்சி நிர்வாகிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். நாங்கள் மாபெரும் மாற்று சக்தி என்கிறார்கள். இதையே நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், ‘மறைந்த விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதர்; மனிதநேயர்! எண்ணற்றோருக்கு உதவிகள் செய்திருக்கிறார்; உணவளித்து இருக்கிறார்; நிறைய இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்வளித்து இருக்கிறார். தனிப்பட்ட நபராக அவரைப் போற்றுவதற்கு நிறைய இருக்கின்றன; மாற்றுக்கருத்தில்லை. ஆனால், விஜயகாந்த் முன்வைத்த அரசியல் ஒரு மோசமான முன்உதாரணம்.
அவர் அரசியலின் மீது நிறைய விமர்சனங்களும், முரண்களும் உண்டு. இருந்தபோதிலும், அதனை தற்போது பேச விரும்புவதில்லை; மறைந்துவிட்டமையால், அவர் செய்த நற்காரியங்களையும், நற்பண்புகளையுமே போற்றுகிறோம். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரது அரசியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, புனிதப்படுத்த முயல்வது ஏற்புடையது அல்ல.
அவர் மீது தமிழக மக்களுக்கு எழுந்திருக்கும் அனுதாபத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முனையும் பிரேமலதாவின் அரசியல் அற்பத்தனமானது. விஜயகாந்த் அடக்கம் செய்ய குழிக்குள் இறக்கப்பட்ட அதே வேளையில், "இந்த நல்ல நாளில்" என விளித்து, " விஜயகாந்த் அரசியலை வெல்ல வைக்க வேண்டும்" என எல்லாக் கட்சியினரும் கூடி இருந்தபோது பிரேமலதா பேசியது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.
விருதுநகர் பரப்புரையிலோ விஜயபிரபாகரன், " அப்பாவின் ஆன்மா சாந்தி அடையணும். எனக்கு ஓட்டு போடுங்க" எனக் கேட்டது அபத்தத்தின் உச்சம்! விஜயகாந்தைத் தனிநபராகப் போற்றலாம்; ஆனால், அவர் முன் வைத்த அரசியலை ஏற்க முடியாது. அவர் இறந்துவிட்டதால், அவரது நற்பண்புகளைப் போற்றுவோம்; விமர்சனங்களைத் தவிர்ப்போம் என்பதுதான் அறம். அதனை முழுதாக் கடைப்பிடிப்போம். அதற்காக அவரது அரசியலை நியாயப்படுத்தவோ, புனிதப்படுத்தவோ முயல வேண்டாம்’ என்று பதிவு போட்டிருக்கிறார்.
விஜயகாந்திற்கு கணிசமான பெண்கள் வாக்குகள் கிடைத்தன. ஆனால், சீமானுக்கு ஜூனியர் வாக்குகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, இந்த சதவிகிதம் அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் அதிகரிக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். பார்க்கலாம்.