திருமணம் முடித்து மூன்றே மாதங்கள்..! ஒரே நேரத்தில் உயிர் துறந்த தம்பதி!

ஈரோடு மாவட்டம் நிச்சாம்பாளையத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஈரோடு மாவட்டம் நிச்சாம்பாளையத்தில் பிரகாஷ் என்பவருக்கும் மஞ்சுளா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கல்லூரி மாணவி மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் பிரகாஷ், மஞ்சுளா மற்றும் அவரது உறவினர் செம்பருத்தி ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வழியில் எதிரே ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது. எதிரே வேன் வருவதை கவனிக்காமல் சென்ற பிரகாஷ் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியது.

இந்த விபத்தில் பிரகாஷ், மஞ்சுளா, செம்பருத்தி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். பின்னர் பொதுமக்களால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டு 3 பேரையும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன 3 மாதத்திலேயே புது மணத் தம்பதி பிரகாஷ் மற்றும் மஞ்சுளா ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மேலும் உறவினர் பெண்ணான செம்பருத்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லக் கூடாது, தலைக்கவசம் அணிய வேண்டும், வேகமாக செல்லக்கூடாது என நீதிமன்றம் முதல் சமூக ஆர்வலர்கள் வரை படித்து படித்து சொல்கிறார்கள்.

அதெல்லாம் எங்களுக்கு தெரியும் என்று செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது யாருக்கும் இங்கே சந்தோஷம் இல்லை. சமீபத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் போலீசாரே கண்டிப்பாக தலைக் கவசம் அணியவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைக்கவசம் அணியாத போலீசார் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றால் அந்த உத்தரவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என பொதுமக்கள் உணர்ந்தால்தான் விபத்துகள் குறையும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு.