பீஜிங்: 30 ஆண்டுகளாக சிகரெட் குடித்த நபரின் நுரையீரல் தார் ரோடு போல மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் ஊதித்தள்ளிய நபர்..! கருப்பாக மாறிய நுரையீரல்..! பார்த்து அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்!
சீனாவில் ஜியாங்ஷூ பகுதியில் உள்ள Wuxi People's ஹாஸ்பிடலில் 52 வயது ஆண் ஒருவர் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அதீத புகைப்பழக்கம் காரணமாக, அவரது நுரையீரல் கெட்டுப் போய்விட்டதாகக் கண்டுபிடித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயன்றாலும், நுரையீரல் உள்பட உடலின் முக்கிய பாகங்கள் அனைத்தும் செயலிழந்ததால் அந்த நபரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
அதேசமயம், அவரது மார்புக் கூட்டை பிளந்த மருத்துவர்கள் உடலின் உள்ளே உள்ள நுரையீரலை வெளியே எடுத்து பரிசோதித்தனர். சுமார் 30 ஆண்டுகளாக, தொடர்ந்து புகை பிடித்ததால் அந்த நபரின் நுரையீரல் தார் ரோடு போல கரு கருவென நிறம் மாறியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஒரு ஆரோக்கியமான நுரையீரல் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், கருப்பாக, அனலில் வாட்டியது போல அவரது நுரையீரல் காணப்பட்டது. நுரையீரல் முழுக்க அழுக்கு படிந்துள்ளது. அவர் எந்தளவுக்கு மோசமாக சிகரெட் புகைத்திருந்தால் அது நுரையீரலை பாதித்திருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ள மருத்துவர்கள் இதுபற்றிய வீடியோ காட்சி ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்த பின், புகைப்பழக்கம் உள்ளவர்கள் திருந்துவார்கள் என நம்பலாம்.